இந்தியாவில் வேகமாக பரவும் கரோனா: 4வது அலை வருகிறதா?

By காமதேனு

இந்தியா முழுவதும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சமூக இடைவெளி, மாஸ்க் அணியாவிட்டால் கட்டாயம் நான்காவது அலை வரும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் நேற்று 12,249 கரோனா புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.நாட்டில் அதிகரித்து வரும் கரோனா எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கான காரணங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் அதிகரித்து வரும் கரோனா எண்ணிக்கையின் காரணமாக நான்காவது அலை தோன்றி விட்டதா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. செவ்வாயன்று குறைந்திருந்த கரோனா எண்ணிக்கை, புதன்கிழமை 12,249 புதிதாக பதிவாகுய்ள்ளது. அத்துடன் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, நாடு முழுவதும் கரோனாவால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 5,24,903 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் தற்போது செயலில் உள்ள கரோனா எண்ணிக்கை 81,687 ஆக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த தொற்று எண்ணிக்கைகளில் 0.19 சதவீதமாகும். அதேபோல் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கரோனா தொற்று விகிதம் 3.94 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை வரை 3659 புதிய கரோனா தொற்று எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மகாராஷ்டிராவில் கரோனா தொற்று தற்போது 9.36 சதவீதமாக உள்ளது. அத்துடன் இம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,915 ஆக உயர்ந்துள்ளது.
இதே போல சென்னையில் கரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 300-ஐ கடந்துள்ளதால், 4ம் அலைக்கான துவக்கமாக பார்க்கப்படுகிறது. மே மாத துவக்கத்தில், தினசரி கரோனா தொற்று இரண்டு இலக்க எண்ணில் மட்டுமே பதிவானது. மே மாத இறுதியில் பரவல் வேகம் மீண்டும் அதிகரித்தது. தொடர்ந்து, இம்மாத துவக்கத்தில், தினசரி தொற்று 50 என்ற நிலையில் பதிவானது. தற்போதைய கரோனா தொற்று அதிகரிப்பு, நான்காம் அலைக்கான அறிகுறியாக பார்க்கப்படுவதால், மாஸ்க், சமூக இடைவெளி பின்பற்றாமை போன்ற அலட்சிய போக்கை மக்கள் கடைப்பிடிக்கும்பட்சத்தில், நான்காம் அலையை தடுக்க முடியாது என, மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE