அணு ஆயுத சோதனை பதற்றம்: ராணுவத்துடன் ஆலோசனை நடத்தினார் கிம் ஜாங் உன்

By காமதேனு

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இராணுவம் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்த முக்கிய ஆலோசனையை நேற்று நடத்தினார். வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தும் என்ற யூகங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் கவனத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில், ராணுவ முன்னணி பிரிவுகளின் செயல்பாட்டுக் கடமைகளை சேர்ப்பது, செயல்பாட்டுத் திட்டங்களை மாற்றியமைப்பது மற்றும் முக்கிய இராணுவ அமைப்புகளை மறுசீரமைப்பது குறித்து விவாதித்ததாக வடகொரியா அரசு பத்திரிகை தெரிவித்துள்ளது. மேலும், முன்னணி பிரிவுகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை அதிபர் கிம் வலியுறுத்தினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அணு ஆயுத சோதனைக்கான நேரம் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என்பதால் உலக நாடுகள் இதனை உன்னிப்பாக கவனித்தன. அணு ஆயுத சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம், அதற்கான நேரத்தை கிம் முடிவு செய்வார் என்று தென் கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சிறிய அணுகுண்டுகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், உளவு செயற்கைக்கோள்கள் மற்றும் ட்ரோன்களை உள்ளடக்கிய இராணுவ மேம்பாட்டு திட்டங்களை அதிபர் கிம் வகுத்தார். மேலும், இந்த ஆண்டு மிகப்பெரிய அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை அவர் சோதித்துள்ளார், இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களுக்காக வடிவமைக்கப்பட்ட குறுகிய தூர ஏவுகணைகளும் அடக்கம்.

ஏற்கெனவே உணவு பற்றாக்குறை மற்றும் கரோனா தொற்றுநோய் பாதிப்புகள் காரணமாக வடகொரியா கடுமையாக பாதித்துள்ளது. மேலும், கடந்த வாரம் புதிய வகை குடல் தொற்றுநோய் பரவி வருவதாகவும் அந்த நாட்டு அரசு அறிவித்திருந்தது. எனவே இப்போது வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தாது என தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நம்பிய நிலையில், இந்த அவசர ஆலோசனையை நடத்தி மீண்டும் பீதியை உருவாக்கியுள்ளார் கிம் ஜாங் உன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE