40 ஆண்டுகளில் இல்லாத அளவு பிரிட்டனில் பணவீக்கம் உயர்வு: விலைவாசி அதிகரிப்பால் மக்கள் அவதி

By காமதேனு

பிரிட்டனின் பணவீக்க விகிதம் மே மாதத்தில் 9.1 சதவீதத்தை எட்டியது, இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமான பணவீக்க அளவாகும்.

ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் விலை பணவீக்கம் 9 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் இது சற்று உயர்ந்துள்ளது, இது 1982 க்குப் பிறகு அதிகபட்ச அளவாகும் என்று பிரிட்டன் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் தலைமைப் பொருளாதார நிபுணர் கிராண்ட் ஃபிட்ஸ்னர், "தொடர்ச்சியாக உணவுபொருட்களின் விலை மற்றும் வரலாறு காணாத அளவுக்கு எரிபொருள் விலைகளும் அதிகரித்துள்ளன, கடந்த ஆண்டை விடவும் ஆடைகளின் விலையும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளைப் போலவே இந்த பணவீக்க உயர்வு காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து பிரிட்டன் மக்களின் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது. இந்த பணவீக்கம் தற்போது குறையாது என்றும், அக்டோபர் மாதத்தில் உள்நாட்டு எரிபொருள் கட்டணங்கள் மீதான உச்சவரம்பு நீக்கப்பட்டால் பணவீக்கம் 11% ஆகலாம் என்றும் இங்கிலாந்து வங்கி தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்ய போரினால் எரிபொருள், கோதுமை போன்ற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பல சிக்கல்கள் எழுந்துள்ளது இந்த பணவீக்க உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE