சினிமா பாணியில் வேனைத் துரத்தி பிடித்த போலீஸார்: மதுரையில் சிக்கிய 1 டன் கஞ்சா!

By மு.அஹமது அலி

மதுரை அருகே வணிக வரித்துறை அதிகாரிகள் வாகனச் சோதனையின் போது மினி வேனில் கடத்தப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு டன் கஞ்சா சிக்கியது, இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை வண்டியூர் அருகே வணிகவரித் துறை அதிகாரிகள் நேற்று இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை நிறுத்த முயன்ற போது அது நிற்காமல் சென்றது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த வாகனத்தை விரட்டிப் பிடித்து வாகனத்தில் சோதனை மேற்கொண்டனர். அதில், 20 மூட்டைகளில் சுமார் 1 டன் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலம்

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த வணிக வரித் துறையினர் உடனடியாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அங்கு வந்த காவல்துறை காண்காணிப்பாளர் சிவபிரசாத் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், வாகன ஓட்டுநர் பிரகாஷையும் கைது செய்தார். மேலும், கஞ்சா எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் வேனை துரத்தி பிடித்து போலீஸார் கஞ்சாவை பறிமுதல் செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE