சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: அழுத்தமாக அடியெடுத்து வைக்கும் அறநிலையத்துறை!

By கரு.முத்து

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தகுந்த சமயம் பார்த்து ஒவ்வொரு அடியாக அழுத்தமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது.

எப்போதும் சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் தான் சிதம்பரம் நடராஜர் கோயிலில் திகழ்ந்து கொண்டிருக்கும். அதற்கு காரணம் நடராஜர் கோயிலின் நிர்வாகம் அங்குள்ள பொது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதுதான். தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் பக்தர்களுக்கு அவர்கள் கட்டுப்பாடுகளை விதிப்பதும், கோயில் வழிபாட்டு முறைகளில் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றங்களைச் செய்வதும் பக்தர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய் மோதல்கள் நடைபெறுகின்றன.

இதனால் நடராஜர் கோயில் விவகாரம் பலமுறை பெரிதாக பேசப்பட்டுள்ளன. அப்படித்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓதுவார் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட அனுமதிக்காதது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து, மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று இறுதியில் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர் பெரிய அளவில் சர்ச்சைகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், கோயிலுக்குள் மிகப்பெரிய அளவில் அலங்காரங்கள் செய்யப்பட்டு பட்டாசு ஆலை அதிபர் இல்ல திருமணம் நடத்த அனுமதித்தது, கோயிலுக்குள் காருக்குள் செல்ல அனுமதித்தது என தீட்சிதர்களின் சில செயல்கள் பக்தர்களை முகம் சுழிக்க வைத்தன. கண்டனத்துக்கும் உள்ளாகின.

இந்த நிலையில் தான் கரோனாவை காரணம் காட்டி நடராஜர் கோயிலுக்குள் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றுதான் கனகசபை மீது ஏறி வழிபடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதும். ஆனால் தமிழகம் முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகும் கூட கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.

இது அங்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. பக்தர்கள் தீட்சிதர்களுக்கு இடையே சிலசமயம் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த புகார்கள் காவல்நிலையத்தில் பதிவாகியிருக்கின்றன. கனகசபை மீது பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தெய்வத் தமிழ் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. அதன் விளைவாக கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் திரண்டு வந்து அந்த அரசாணையை நிறைவேற்றி வைத்தனர்.

இந்த போராட்டங்களுக்கு இடையே கோயில் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று கோவில் வரவு - செலவு மற்றும் நிர்வாக முறைகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு கடந்த ஜூன் 7மற்றும் 8 ஆகிய தேதிகளில் அறநிலையத்துறை குழு ஒன்றை கோயிலுக்கு அனுப்பியது. ஆனால் அக்குழுவின் ஆய்வை ஏற்க தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர். தங்கள் வழக்கறிஞர் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் பெற்ற ஒரு தீர்ப்பை சுட்டிக்காட்டி, தங்களை ஆய்வு செய்ய அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை என்று உறுதிபட மறுத்துவிட்டனர்.

அதனையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில் மீது அக்கறையுள்ளவர்கள் கோயில் நிர்வாகம் குறித்த தங்களது கருத்துக்களை அறநிலையத்துறை குழுவிடம் தெரிவிக்கலாம் என்று அறிவித்து, 20 மற்றும் 21 தேதிகளில் அறநிலையத்துறை குழுவினர் பக்தர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றனர். அதில் சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கோயில் குறித்த தங்களது கருத்துக்களை, புகார்களை கூறி இருக்கின்றனர்.

ஒரு பக்கம் அறநிலைத்துறை குழு மூலமாக பக்தர்களின் கருத்துகளை பெற்ற அதே வேளையில் இன்னொரு பக்கம் தீட்சிதர்கள் மீது சட்டப்படியான சில நடவடிக்கைகளையும் அறநிலைத்துறை ஒவ்வொன்றாக எடுத்து வருகிறது. கடந்த 20-ம் தேதியன்று இரவு, குழந்தைத் திருமணம் செய்து வைத்ததாக கோயில் தீட்சிதர்கள் மீது சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து 21-ம் தேதியன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தேவாரம் திருவாசகம் பாடலாம் என்று அனுமதித்து அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது

இது பக்தர்களின் நெடுநாளைய ஏக்கம். தீட்சிதர்கள் அனுமதித்தால் மட்டுமே கனகசபை மீது ஏற முடியும், அவர்கள் அனுமதித்தால் மட்டுமே தேவாரப் பாடலை பாட முடியும் என்ற நிலை இருந்து வந்தது. முதல் கட்டமாக கனகசபை மீது ஏறி வழிபட அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு தேவாரம் திருவாசகம் பாடலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பது இவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20-ம் தேதியன்று இதனை அரசாணை வெளியிட வேண்டும் என்று தெய்வத்தமிழ் பேரவையினர் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதனை ஏற்று மறுநாளே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது அரசின் அழுத்தமான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீட்சிதர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

சட்ட ரீதியான ஆய்வுக்கு கூட அனுமதிக்காத தீட்சிதர்கள் மீது, தமிழக அரசு குழந்தை திருமண வழக்கு, கனகசபை மீது ஏறி வழிபட அனுமதி, கனகசபை மீது தேவாரம் திருவாசகம் பாட அனுமதி என்று ஒவ்வொன்றாக தனது வளையத்தை இறுக்கி வருவதாகவே தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE