மனைவியை அடித்து தூக்கில் தொங்க விட்டு வலிப்பு நோயில் இறந்ததாக நாடகமாடிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை, தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், 2வது தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது(30). இவர் தி.நகரில் சாலையோர நடைபாதையில் துணி கடை வைத்துள்ளார். இவரது மனைவி அப்ரின் ரோஸ்(20). இவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு அப்ரின் வீட்டில் குழந்தை அழுகை சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் ரேஷ்மா என்பவர் ஓடிவந்து வந்து பார்த்தபோது அங்கு அப்ரின் மயக்கத்தில் கிடந்துள்ளார்.
அப்போது, ரேஷ்மாவிடம் அப்ரின் வலிப்பு நோய் காரணமாக மயங்கி விட்டதாகவும், குழந்தை பசிக்காக அழுகிறது என்றும் கணவர் சாகுல் தெரிவித்துள்ளார். பின்னர், ரேஷ்மாவிடம் குழந்தையை கொடுத்து விட்டு சாகுல் அமீது, தனது மனைவி அப்ரின் ரோஸை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அப்ரினை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தாய் நிஷா ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார், அப்ரின் ரோஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அப்ரின் ரோஸ் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், சாகுல்அமீதை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவியை கொலை செய்து விட்டு வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து சாகுலை கொலை வழக்கில் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.