'பாதாள சாக்கடை டெண்டருக்கு லஞ்சம்': பஞ்சாப் ஐஏஎஸ் அதிகாரி அதிரடியாக கைது

By காமதேனு

பாதாள சாக்கடை குழாய் அமைப்பதற்கான டெண்டர்களுக்கு 1 சதவீதம் லஞ்சம் கேட்ட புகாரின் அடிப்படையில் பஞ்சாப் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் போப்லி கைது செய்யப்பட்டார். கழிவுநீர் வாரியத்தில் உதவி செயலாளராக இருந்த சந்தீப் வாட்ஸ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கழிவுநீர் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த 2008-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் போப்லி, கடந்த மே மாதம் ஓய்வூதிய இயக்குநராக மாற்றப்பட்டார்.

ஊழல் தடுப்பு ஹெல்ப்லைனில் ஒப்பந்ததாரர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது இவர் கைது செய்யப்பட்டார். பாதாள சாக்கடை பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் இவர் இரண்டாவது தவணை லஞ்சம் கேட்ட வீடியோ ஆதாரத்தை ஒப்பந்ததாரர் வெளியிட்டார்.

அரசாங்க ஒப்பந்ததாரர் சஞ்சய் குமார் அளித்த புகாரில், நவன்ஷேஹரில் பாதாள சாக்கடை குழாய் அமைப்பதற்கான டெண்டர்களுக்கு அனுமதி வழங்க சஞ்சய் போப்லி மற்றும் சந்தீப் வாட்ஸ் ஆகிய இருவரும் 1 சதவீத லஞ்சம் கோரினர். ரூ.7.30 கோடிக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதாகவும், அதற்காக ஜனவரி 12-ம் தேதி, டெண்டர் ஒதுக்கீட்டிற்கு போப்லி ரூ.7 லட்சம் கேட்டு வாட்ஸ்-அப்பில் தனக்கு அழைப்பு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதில் முதல் தவணையாக சந்தீப் வாட்ஸிடம் ரூ.3.5 லட்சம் கொடுத்ததாகவும், இரண்டாம் தவணை கேட்டு அவர்கள் வாட்ஸ்-அப்பில் தொந்தரவு செய்ததாகவும், இது தொடர்பான ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போப்லி மற்றும் வாட்ஸ் ஆகியோர் மீது சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த விஜிலென்ஸ் அதிகாரிகள், நேற்று மாலை சண்டிகரில் உள்ள செக்டர் 20 இல்லத்தில் இருந்து போப்லியை கைது செய்தனர்.

முன்னதாக இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பஞ்சாப் சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் விஜய் சிங்லா, முன்னாள் அமைச்சர் சாது சிங் தரம்சோட் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஜோகிந்தர் பால் போவா ஆகியோரை விஜிலென்ஸ் கைது செய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE