17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்கள் மீது பாய்ந்தது வழக்கு: போலீஸ் அதிரடி

By காமதேனு

17 வயது சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்ததாக தீட்சிதர்கள் மீது சிதம்பரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் சமூகநலத்துறை அலுவலர் சித்ரா, சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதரான சிவராமன் என்பவரின் மகன் கபிலன் என்பவருக்கும், தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த ஜூன் 3-ம் தேதியன்று கீழவீதி எம்.எஸ் திருமண மண்டபத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றதாகவும், அதனையொட்டி கீழவீதி ராசி திருமண மண்டபத்தில் விருந்தோம்பல் நடைபெற்றதாகவும் கூறப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் விசாரணை நடத்திய சிதம்பரம் நகர காவல் துறையினர், குழந்தை திருமணம் நடைபெற்றது குறித்து நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சிவராமன், சோ.பானுசேகர், கபிலன், எம்.எஸ் திருமண மண்டபம் உரிமையாளர் ஆகியோர் மீது நேற்று இரவு வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிதம்பரத்தில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மத்தியில் குழந்தைத் திருமணம் நடத்துவது ஆரம்ப நாட்களில் இருந்தே பழக்கத்தில் இருந்து வருகிறது. இதுகுறித்த புகார்கள் எழும்பிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அது தடைபட்டிருந்தது, அல்லது அது போன்ற திருமணங்கள் வெளியே தெரியாமல் இருந்து வந்தது.

தற்போது நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்த விஷயத்தில் அவர்கள் தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் மீண்டும் குழந்தை திருமணம் குறித்த புகார்கள் தலையெடுக்க தொடங்கியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE