பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான அன்றே உயிரை மாய்த்த மாணவர்: தேர்வு தோல்வியால் நடந்த விபரீதம்

By காமதேனு

உசிலம்பட்டி அருகே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று காலை 10 மணிக்கு 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில், உசிலம்பட்டி அருகே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் சுபாஷ். இவர் செக்காணூரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். இச்சூழலில் நேற்று வெளியான தேர்வு முடிவில் சுபாஷ் இரு பாடப்பிரிவில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர் வீட்டின் அருகிலேயே பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டு சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து, தகவல் அறிந்து நேரில் சென்ற செக்காணூரணி காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE