2013 டிசம்பர். ஹரியாணாவின் ரேவாரி நகரில் முன்னாள் ராணுவத்தினர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில், குஜராத்தின் அப்போதைய முதல்வர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். ராணுவத்தில் சேர்ந்து தேச சேவையாற்ற வேண்டும் என்று இளம் வயதில் லட்சியம் கொண்டிருந்ததாக உணர்ச்சி பொங்கக் கூறினார். பெரும் பாடுபட்டு சைனிக் பள்ளியில் சேர விண்ணப்பித்ததாகவும், அதற்கான நுழைவுத் தேர்வு எழுதச் செல்லக்கூட வசதி இல்லாததால், ராணுவப் பள்ளியில் சேர தனது தந்தை அனுமதிக்கவில்லை என்றும் கம்மிய குரலில் சொன்னார். 1962 இந்திய – சீனப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் சென்ற ரயில், அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு வந்தபோது அவர்களுக்குத் தேநீர் வழங்கி, காலில் விழுந்து வணங்கியதாகப் பரவசப்பட்டார்.
2014 மக்களவைத் தேர்தலில் மோடி மகத்தான வெற்றி பெறுவதற்கு, அவரது தேசபக்தி உரைகளும், ராணுவத்தினர் மீது காட்டிய மதிப்பும் முக்கியக் காரணிகள். அந்தத் தேர்தலில் பாஜக அளித்த பிரதானமான வாக்குறுதிகளில் ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ திட்டமும் ஒன்று.
இளைஞர்களின் ஏமாற்றம்
ஆனால், இன்று வரை அதை மோடி அரசு நிறைவேற்றவில்லை. மாறாக, அரசு அறிவித்திருக்கும் ‘அக்னிபத்’ திட்டத்தின்படி இனி பெரும்பாலானோருக்கு ராணுவப் பணியே 4 ஆண்டுகள்தான்; 25 சதவீதம் பேர் மட்டுமே பணியைத் தொடர்வார்கள் எனும்போது ஓய்வூதியம் குறித்த விவாதமே வலுவிழந்துபோகிறது. ‘அக்னிப் பாதை’ எனத் தமிழில் அழைக்கப்படும் இத்திட்டம், இளைஞர்களின் வேலைவாய்ப்பையும், இந்திய ராணுவத்தின் வலிமையையும் ஒருசேரக் குறைக்கும் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. பெருமளவிலான போராட்டமும் வெடித்திருக்கிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் ராணுவத்தில் ஆள்சேர்ப்புப் பணிகள் நடக்கவில்லை. தற்போது ஆள்சேர்ப்பு தொடர்பான அறிவிப்புடன், இதுவரை இல்லாத அளவுக்கு மாற்றங்களும் அறிவிக்கப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள்கூட முப்படைத் தலைமைத் தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட ஒரே வார்த்தில், ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் 75 சதவீத ‘அக்னி வீரர்கள்’ வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் எனும் நிபந்தனையுடன் வெளியான ‘அக்னிபத்’ அறிவிப்பு இளைஞர்களைக் கொந்தளிக்க வைத்துவிட்டது. பிஹார் தொடங்கி, ஹரியாணா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் போராட்டத்தில் குதித்தனர். சாலை மறியல் போராட்டம், ரயில் எரிப்புச் சம்பவங்கள் என அக்னிப் பாதையில் அனல் தெறிக்கிறது. ராணுவத்தில் சேர தகுதி பெற வேண்டும் என நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் உடற்பயிற்சி செய்து உழைத்து தங்களைத் தயார் செய்துவந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் இந்த அறிவிப்பால் ஆத்திரமடைந்திருக்கிறார்கள். பிஹாரில் பாஜக அலுவலகங்களுக்கு தீவைத்த சம்பங்களும் நடந்திருக்கிறது. அக்னிபத் அறிவிப்பு வருவதற்கு முதல் நாள், 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு எனும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதன் பின்னணி என்ன எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.
அதிகரிக்கும் எதிர்ப்பு
ஒருபக்கம் ராணுவ அதிகாரிகள் பலர் இத்திட்டத்துக்கு ஆதரவாகப் பேசிவரும் நிலையில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், வீரர்களில் பெரும்பாலானோர் இத்திட்டத்தைக் கசப்புடன் பார்க்கின்றனர். தொலைக்காட்சி விவாதங்களில் ராணுவத்துக்கு ஆதரவு எனும் பெயரில் பாஜகவின் கொள்கைகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசிவந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஜீ.டி.பக்சி, தேசப் பாதுகாப்பையே தனது கொள்கையாகக் கொண்டிருப்பதாகப் பேசிவரும் கேப்டன் அமரீந்தர் சிங் போன்றோரும் இந்தத் திட்டம் குறித்து எதிர்மறையான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் ராணுவத் தளபதியும் மத்திய அமைச்சருமான வி.கே.சிங் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தத் திட்டத்தின் உருவாக்கத்தில் தனது பங்கு எதுவும் இல்லை என்றும், இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டார். இரண்டு ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இத்திட்டம் குறித்து வி.கே.சிங் போன்ற ராணுவ அனுபவஸ்தர்களுக்குக்கூட முழுமையான புரிதல் இல்லை.
இத்திட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து ஏராளமான விவாதங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் சாதக அம்சங்கள் எனச் சொல்லப்படுபவையே பாதகங்களாகச் சுட்டிக்காட்டப்படுவதுதான் இதில் கவனிக்கத்தக்க அம்சம். எதிர்ப்புகளைத் தொடர்ந்து விளக்கங்களையும், சில புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுவரும் அரசு, இதை அமல்படுத்துவதில் உறுதியாகவே இருக்கிறது. ஆனால், சோதனை அடிப்படையிலான திட்டம் எதுவும் இல்லாமல் நேரடியாக இதற்கான ஆளெடுப்புப் பணிகளைத் தொடங்குவது ராணுவத்தின் வலிமையைப் பாதிக்கும் என விமர்சிக்கப்படுகிறது. இது முழுமையாக அமல்படுத்தப்பட்டால் அடுத்த 15 ஆண்டுகளில் ராணுவத்தின் படைப்பிரிவுகளில் இருக்கும் வீரர்களில் 75 சதவீதம் பேர் போதிய திறனற்றவர்களாகவே இருப்பார்கள் என்று கூறும் எதிர்ப்பாளர்கள், இது போர்க் காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கிறார்கள். இத்திட்டத்தால் ராணுவத்தின் மனிதவளம் கடும் பாதிப்பைச் சந்திக்கும் என்பது பலரது வாதம்.
முன்னாள் வீரர்கள் சுமையா?
இத்திட்டத்தால் ராணுவத்துக்கான ஓய்வூதிய சுமை குறையும் எனும் வாதம் பல முன்னாள் ராணுவ வீரர்களையும் உயரதிகாரிகளையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் என 52 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால், பாதுகாப்புத் துறையில் பணியாற்றியவர்களின் விதவைகள் 6 லட்சம் பேர் உட்பட சுமார் 20 லட்சம் ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்குவது எப்படி ஒரு சுமையாகும் என அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். குறிப்பாக, பாதுகாப்புத் துறையில் ராணுவம் அல்லாத பிற பிரிவுகளில் பணிபுரிபவர்களின் ஓய்வு வயது 60 எனும் நிலையில், அதற்கு முன்னதாகவே ராணுவத்தினர் ஓய்வுபெற்றுவிடுகிறார்கள் (லெப்டினன்ட் கர்னல் பதவி, அதற்கு இணையான / கீழான பணியில் இருப்பவர்கள் 56 வயதில் ஓய்வுபெறுகிறார்கள். அதிகபட்சமாக மேஜர் ஜெனரல்கள் ஓய்வுபெறும் வயது 60. பொதுவாக ஒரு ராணுவ வீரர் பணியில் சேர்ந்து 17 ஆண்டுகள் பணிபுரியலாம். கிடைக்கும் ரேங்க்கைப் பொறுத்து பணி நீட்டிப்பு செய்யப்படும்)
இந்தியப் பாதுகாப்புப் படைகளில் (தரைப்படை, கடற்படை, விமானப் படை) மொத்தம் 15 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். பாதுகாப்புத் துறையின் பிற பிரிவுகளில் பணிபுரியும் சிவிலியன்கள் 3.75 லட்சம் பேர். சிவிலியன்கள் ஓய்வுபெறும்போது வழங்கப்படும் ஓய்வூதிய மொத்தத் தொகையைவிடவும், ராணுவத்தினரின் ஓய்வூதிய மொத்தத் தொகை குறைவுதான் என்பது எதிர்ப்பாளர்களின் குரலுக்கு வலு சேர்க்கும் புள்ளிவிவரம். அதுமட்டுமல்ல, பிடித்தம் போக அக்னி வீரர்களுக்கு வழங்கப்படவிருக்கும் சம்பளம், அரசு அலுவலகத்தில் பணிபுரியும் பியூனுக்கு நிகரான சம்பளம்தான் எனும்போது இதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவார்களா என்கிறார்கள் இத்திட்டத்தின் எதிர்ப்பாளர்கள்.
எதிர்காலம் குறித்த அச்சம்
நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் பிற பணிகளுக்குச் செல்லும்போது, ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள் என்பதால் அவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்பது ஆதரவாளர்களின் வாதம். ஆனால், தங்கள் திறனை வெளிப்படுத்துவதன் மூலம் 25 சதவீதம் பேர் பணியில் தக்கவைக்கப்படுகிறார்கள் எனும்போது, அந்தத் தகுதியைப் பெறாத 75 சதவீதம் பேரின் மனநிலை என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ஒருவேளை தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சேர அவர்கள் முயலும்போது, என்ன காரணத்தால் ராணுவத்தில் அவர்கள் பணிநீட்டிப்பு செய்யப்படவில்லை எனும் கேள்வி எழுப்பப்படலாம். இதனால் பணி மறுக்கப்படவோ குறைவான சம்பளத்தில் வேலை கிடைக்கவோ வாய்ப்புகள் அதிகம். ஓர் இளைஞர் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார் என்பதே அவரது திருமணத்துக்கு உத்தரவாதம் தரும் செய்தியாக இருக்கும். ஆனால், ‘அக்னிபத்’ முறைப்படி அவர் 25 சதவீதத்துக்குள் வந்தால் மட்டுமே திருமணச் சந்தையில் விலைபோவார். இல்லாவிட்டால், அவரது எதிர்காலம் கேள்விக்குறிதான்.
அக்னி வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை, அசாம் ரைஃபிள் ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்படும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். மத்திய காவல் படைகள், மாநிலக் காவல் துறை போன்ற அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வேலையில் முன்னுரிமை என்பது உத்தரவாதம் ஆகாது என்பதால் அதையும் பலர் அவநம்பிக்கையுடன்தான் பார்க்கிறார்கள்.
தோல்வி உதாரணங்கள்
“இது நகலெடுக்கப்பட்ட திட்டம் அல்ல” என்று நகைச்சுவையாகத் தெரிவித்த ராஜ்நாத் சிங், அதேசமயம் இந்தத் திட்டத்தை உருவாக்கும்போது, பிற நாடுகளில் அமலில் இருக்கும் இதுபோன்ற திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன என்றும் குறிப்பிட்டார். உண்மையில் பல நாடுகளில், குறுகிய காலப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் ராணுவ வீரர்களுக்குப் போர்க் களத்தில் வெற்றி கிடைப்பது அரிது. குறுகிய காலப் பயிற்சி பெற்று வியட்நாமுக்குச் சென்ற அமெரிக்க வீரர்களுக்குக் கிடைத்த படுதோல்வி, போதிய அனுபவமற்ற ரஷ்ய வீரர்கள் உக்ரைனுக்குள் நுழைந்த பின்னர் அந்நாட்டு வீரர்களை எதிர்கொள்ள முடியாமல் வீழ்ந்தது எனப் பல உதாரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
தெற்காசியாவில் சீனாவுக்கு நிகரான ராணுவ சக்தியாக வளர விரும்பும் இந்தியா, ராணுவத்துக்குச் செய்யும் செலவைக் குறைப்பது எப்படி சரியாக வரும் எனும் கேள்வியும் எழுப்பப்படுகிறது. குறிப்பாக, பாதுகாப்புத் துறையில் சீனாவின் பட்ஜெட் மதிப்பு 330 பில்லியன் டாலர். இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 76.6 பில்லியன் டாலர்தான். இத்தகைய சூழலில், செலவினங்களைக் குறைப்பதாகச் சொல்லி ராணுவத்தின் பலத்தைக் குறைப்பதா எனும் கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
வயது பிரச்சினை
பிரச்சினைக்குரிய அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடனான இந்தியாவின் எல்லைப் பகுதி மலைப் பகுதிகள் நிறைந்தது. கார்கில் போருக்குப் பின்னர் 1999-ல் உருவாக்கப்பட்ட கார்கில் மறுஆய்வுக் குழு முன்வைத்த பரிந்துரையின்படி அங்கு நடுத்தர வயது வீரர்களைக் காட்டிலும் இளம் வீரர்கள் பணியில் இருப்பதுதான் நல்லது; வயது சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்று இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
படைப்பிரிவுகளின் சராசரி வயது 32 என இதுவரை இருந்ததைச் சுட்டிக்காட்டும் அவர்கள், அக்னிப் பாதை திட்டத்துக்குப் பின்னர் அது 26 ஆகக் குறையும் என்கிறார்கள். ராணுவத்தின் முகத்தை இளமையாக்குவது இத்திட்டத்தின் நோக்கம் என்றே பிரதானமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இப்படியான இடங்களில் அதிக ஆண்டுகள் பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதுதான் பாதுகாப்பானது என்று இத்திட்டத்தின் எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.
இளம் வீரர்கள் தொழில்நுட்பங்களை எளிதில் கிரகித்துக்கொள்வார்கள் என இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், ராணுவத் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ள வயதைக் காட்டிலும் அனுபவம்தான் கைகொடுக்கும் என எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள்.
முழுமை கிடைக்குமா?
நான்கு ஆண்டுகள் பணிபுரியவிருக்கும் அக்னி வீரர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக, ராணுவத்தில் ஒரு வீரருக்கு அடிப்படைப் பயிற்சிகள் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வழங்கப்படும். அதன் பிறகு ஆயுதம் சார்ந்த அறிவு, சக வீரர்களுடனான நட்புறவு என ஒரு ராணுவ வீரர் முழுமையடையவே மூன்று ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும். ஆனால், அக்னி வீரர்கள் அந்த நிலையை எட்டுவதற்கு முன்பாகவே பணியிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும். மிகக் குறுகிய கால அவகாசத்தில் அதிநவீனப் போர் முறை, உயர் தொழில்நுட்பக் கருவிகள் போன்றவற்றைக் கையாளும் திறனை அவர்கள் பெற முடியாது. போதிய பயிற்சியற்ற வீரர்களால், சக வீரர்கள் காயமடையும் அல்லது மரணமடையும் தருணங்களைக் கொண்ட போர்ச்சூழலை எதிர்கொள்ள முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஒற்றுமை உணர்வு என்னவாகும்?
அக்னி வீரர்கள் பணியில் இருக்கும் நான்கு வருடங்களில், பணியில் தக்கவைத்துக்கொள்ள, தங்களை நிரூபிக்க கடுமையாக உழைப்பார்கள் என்பதால், அங்கு சிறந்த வீரர்கள் உருவாவார்கள் என்கிறார்கள் ஆதரவாளர்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் சக வீரர்களுடனான தோழமையை வளர்த்துக்கொண்டு ஒற்றுமையான பலத்தை உருவாக்கிக்கொள்வதைவிடவும், சுய அக்கறையிலேயே கவனம் செலுத்துவார்கள் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். ராணுவத்தில் வேலை என்பது பணி என்பதைக் காட்டிலும் சேவையாகவே கருதப்படுகிறது. அந்தச் சேவை உணர்வு இங்கு அடிபட்டுப்போகிறது என்பதும் எதிர்ப்பாளர்களின் வாதம்.
தங்கள் கனவு பறிபோகிறது எனும் ஆத்திரத்தில் வீதியில் இறங்கிப் போராடுபவர்கள் ஒருகட்டத்தில் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். ஆனால், இளம் வயதில் பணியில் சேர்ந்தால் அவர்களுக்கு ராணுவ ஒழுங்கும் கட்டுப்பாடும் போதிக்கப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவார்கள் என்பதால், இந்தத் திட்டம் நல்லதுதான் என்கிறார்கள் ஆதரவாளர்கள். ஆனால், இத்தனை ஆண்டுகள் காத்திருந்து நிரந்தர வேலைக்கு உத்தரவாதம் குறைவு என்பதால்தான் அவர்கள் போராடுகிறார்கள் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். கூடவே, சொந்த வாழ்க்கையில் வெற்றி பெற முடியாமல் போகும் தருணங்களில், ஆயுதப் பயிற்சி அனுபவத்தை வைத்து தவறான பாதைக்கு அவர்கள் செல்ல வாய்ப்புகள் அதிகம் என்றும் பலர் அச்சம் தெரிவிக்கிறார்கள். ஆனால், இதற்கு முன்னர் ஓய்வுபெற்றவர்கள் அப்படியெல்லாம் அசம்பாவிதங்களில் இறங்கியதில்லை என்று ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள். ஆனால், முழுமையாக ராணுவப் பணியை முடித்து ஓய்வுபெறுபவர்களின் வயது, குடும்ப சூழல் போன்றவற்றையும் 25 வயதில் ஓய்வுபெறவிருக்கும் அக்னிவீரர்களின் சூழலையும் எப்படி ஒப்பிட முடியும் எனும் கேள்வியைப் பலர் முன்வைக்கிறார்கள்.
இத்திட்டத்தின் ஆதரவாளர்களின் வாதங்களைவிடவும், எதிர்ப்பவர்களின் வாதங்கள் தர்க்கபூர்வமாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய ஆக்ரோஷமான போராட்டம், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறும் முடிவுக்கு மத்திய அரசைத் தள்ளியது. தற்போது, ராணுவக் கனவில் இருந்த இளைஞர்கள், அக்னிபத் திட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் நிலையில் இதையும் பாஜக அரசு திரும்பப் பெறுமா எனும் எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.