குமரி மாவட்டத்தில் அடகுக் கடையில் போலி நகையைக் கொடுத்து நூதனமுறையில் மோசடி செய்த பெண்ணை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தலக்குளம் அருகே உள்ள புதுவிளையைச் சேர்ந்தவர் ஜெனின். இவர் திங்கள் நகர் ஆரோக்கியபுரம் பகுதியில் அடகு நகைக்கடை நடத்திவருகிறார். இவர் கடையில் இருக்கும்போது 19.350 கிராம் எடைகொண்ட நகையை அடகுவைத்து பெண் ஒருவர் 68 ஆயிரம் ரூபாய் கடன்பெற்றுச் சென்றார். இவர் அப்போது தன் பெயர் சந்தியா என்றும், கணவர் பெயர் விஜி, செட்டியத் தெரு, இரணியல் என்றும் முகவரி கொடுத்துள்ளார். மீண்டும் இருநாள்கள் கழித்து அதே அடகுக்கடைக்கு வந்த அந்த பெண், கடையில் ஜெனின் இல்லாத நிலையில் அவரது சகோதரரிடம் 21.5 கிராம் எடையுள்ள நகையை அடகுவைத்துள்ளார்.
அப்போது கொடுத்த முகவரியில் தனது பெயர் சைலஜா, கணவர் பெயர் சஜூவ், இரணியல் எனக் கொடுத்துள்ளார். இது இரண்டையும் தங்க நகைகள் என்றே நம்பி ஜெனின் தன் கடை லாக்கரில் வைத்திருந்தார். இந்நிலையில், குமரி மாவட்டத்தில் பல அடகுக்கடைகளில் போலி நகைகளைக் கொடுத்து ஒரு கும்பல் மோசடி செய்திருப்பது குறித்து நாளிதழ்கள் மூலம் அறிந்த ஜெனின் தன் கடையில் இருக்கும் நகைகளையும் சோதித்துப் பார்த்தார். அப்போதுதான், இரண்டுமே போலியானது எனவும், செப்புக் கம்பிகளின் மேல் தங்கமுலாம் பூசியிருப்பதும் தெரியவந்தது. சிசிடிவி காட்சியில் இரு நகைகளையும் அடகுவைத்தது ஒரே பெண் தான் எனத் தெரியவந்தது. போலீஸாரின் விசாரணையில் போலி நகைகளைக் கொடுத்து ஏமாற்றியது நாகர்கோவிலைச் சேர்ந்த ஜேசுராஜ் என்பவரது மனைவி அனுஷா(32) எனத் தெரியவந்தது. போலீஸார் தேடுவது தெரிந்து அனுஷா தலைமறைவாகிவிட்டார். இதேபோன்ற மோசடியின் பேரில் ஜேசுராஜ் ஏற்கெனவே சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.