காதல் விவகாரத்தில் நடந்த கொலை... போலீஸார் உட்பட நான்கு பேர் சிக்கினர்: காதலியை தேடும் போலீஸ்

By காமதேனு

கும்மிடிப்பூண்டியில் காணாமல் போன தனியார் நிறுவன ஊழியர், ராஜபாளையம் அருகே கொலை செய்யப்பட்டு கண்மாயில் வீசப்பட்ட வழக்கில் போலீஸ்காரர், பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், கும்மிடிப்பூண்டி சிப்காட் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 28-ம் தேதி முதல் அவரைக் காணாத காரணத்தினால் அவரின் குடும்பத்தினர் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில், மாரிமுத்துவின் உறவினரான ராமநாதபுரத்தை சேர்ந்த வில்வதுரை என்பவர், மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸாக இருக்கிறார். கோவில்பட்டியைச் சேர்ந்த ராகினி என்பவர் முகநூல் மூலமாக மாரிமுத்துவுக்கும், வில்வதுரைக்கும் அறிமுகம் ஆகியிருந்தார். ராகினி மாரிமுத்துவை காதலித்து வந்ததால், மாரிமுத்துக்கும் வில்வதுரைக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 17-ம் தேதி ராஜபாளையம் அருகே உள்ள கண்மாயில் அழுகிய நிலையில், மாரிமுத்துவின் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து மாரிமுத்து காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக கும்மிடிப்பூண்டி போலீஸார் மாற்றம் செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய வில்வதுரை, அவரது கூட்டாளிகளான தூத்துக்குடியை சேர்ந்த ரவிகுமார், இசக்கிராஜா, இளவரசி ஆகிய நான்கு பேரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்தியச் சிறையில் நேற்று அடைத்தனர். கொலையின் முக்கிய குற்றவாளி ராகினி தலைமறைவாக இருக்கிறார். அவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE