அன்று எஸ்பிஐ... இன்று இந்தியன் வங்கி: 'கர்ப்பிணிகள் வேலையில் சேரமுடியாது' என்ற அறிவிப்புக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

By காமதேனு

மூன்று மாதங்களுக்கும் மேலான கர்ப்பிணிப் பெண்கள் வங்கி பணியில் சேர "தற்காலிகமாக தகுதியற்றவர்கள்" என்று அறிவித்த இந்தியன் வங்கியின் புதிய ஆட்சேர்ப்பு விதியைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. இதன் கீழ் 3 மாதங்களுக்கும் மேலான கர்ப்பிணிப் பெண்கள் வேலை வாய்ப்புகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணிப் பெண்களை 'மருத்துவ ரீதியாக வேலைக்குத் தகுதியற்றவர்கள்' என்று இந்தியன் வங்கி கூறியுள்ளது. மேலும், வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குழந்தை பிறந்த ஆறு வாரங்களுக்குப் பிறகு வங்கியில் நியமனம் செய்வதற்காக மறுபரிசீலனை செய்யப்படுவார்கள் என்று வங்கியின் விதிகள் தெரிவித்தன.

இந்தியன் வங்கியின் இந்த ஆள்சேர்ப்பு விதிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், "ஒரு பெண் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தால், அவர் 'தற்காலிகமாக தகுதியற்றவள்' என்று கருதப்படுவார் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரால் உடனடியாக வேலையில் சேரமுடியாது என்றும் இந்தியன் வங்கி விதிகளை வகுத்துள்ளது. இது அவர்கள் பணியில் சேர்வதில் தாமதத்திற்கு வழிவகுக்கும். அவர்கள் தங்கள் சீனியாரிட்டியையும் இழக்க நேரிடும்.

இது ஒரு தீவிரமான விஷயம், சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020-ன் கீழ் உள்ள மகப்பேறு நன்மைகளுக்கு முரணாக இந்த விதிகள் இருப்பதால், வங்கியின் இந்தச் செயல் பாரபட்சமானது மற்றும் சட்டவிரோதமானது எனத் தோன்றுகிறது. எனவே இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கியும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதே போன்ற விதிகளை வெளியிட்டது. ஆனால் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த அறிவிப்பு உடனடியாக திரும்பப் பெறப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE