`தற்கொலை முடிவு வேண்டாம்; அடுத்த இலக்கை நோக்கி செல்லுங்கள்'- மாணவர்களுக்கு டிஜிபி அறிவுரை

By காமதேனு

"பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் மறுதேர்வு எழுதி நீதிபதி, ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் உள்ள மாணவர்கள் காவல் நிலையத்தை அணுகி கவுன்சிலிங் பெறலாம்" என டிஜிபி சைலேந்திரபாபு கேட்டுக் கொண்டுள்ளனர்.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மனம் தளர வேண்டாம் எனவும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் எனவும் அதில் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல துறைகளில் வாய்ப்புகள் இருப்பதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் நீதிபதியாகவும், ஐபி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவும் ஆகியுள்ளதாகவும், கடந்த முறை பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பல மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், அப்படிப்பட்ட மன நிலையில் உள்ள மாணவர்கள் அருகிலிருக்கும் காவல் நிலையத்தை அணுகி, கவுன்சிலிங் பெற்று கொள்ளவேண்டும் எனவும் பின்னடைவு குறித்து மாணவர்கள் கவலைப்படாமல் அடுத்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்றும் காவல்துறை அதற்கு பக்கபலமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE