மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராகும் ஹேமந்த் சோரன் - அதிருப்தியில் சம்பாய் சோரன்

By வ.வைரப்பெருமாள்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன், சிறையிலிருந்து வெளி வந்ததைத் தொடர்ந்து, மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

ரூ.600 கோடி மதிப்பிலான நில மோசடி தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன், கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கு முன்னதாக அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஹேமந்த் சோரன் பதவி விலகியதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் இருந்த சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் புதிய முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டு 5 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் 28ம் தேதி, அவருக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இச்சூழலில் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். சம்பாய் சோரன், ஜேஎம்எம் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்படலாம் என அம்மாநில அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே முதல்வர் பதவியிலிருந்து மாற்றப்படுவதில் சம்பாய் சோரன் மகிழ்ச்சியடையவில்லை என்றும், தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்வதாக சட்டமன்ற கட்சிக் கூட்டத்தில் சம்பாய் சோரன் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவரது அதிருப்திக்கு மத்தியில் ஹேமந்த் சோரன் புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலத்துக்கு திரும்பியதும் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE