குற்ற வழக்கில் சிக்கிய மகன்... காவல் நிலையத்துக்கு அழைத்த போலீஸ்: உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை!

By காமதேனு

குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தந்தையும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால் அடுத்துள்ள விழிதியூர் சங்கரன் தோட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேசன். டிரைவராக பணியாற்றி வரும் இவரை, மயிலாடுதுறை மாவட்டம், பாளையூர் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து நேற்று இரவு கார்த்திகேயன் குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு போலீஸார், அவரின் தந்தை முருகையனை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். வேலைக்குச் செல்லாமல் மகன் குற்ற வழக்கில் சிக்கியதை மனைவி வசந்தியிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் முருகையன். மகன் காவல் நிலையத்தில் இருப்பதைக் கண்டு மன வருத்தத்திலிருந்த அவர் இன்று காலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் முருகையன் வராததால் சந்தேகம் அடைந்த வசந்தி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முருகையன் இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வசந்தி, அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இதைத் தொடர்ந்து முருகையனை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காகக் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து நிரவி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE