பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: 12-ம் வகுப்பிற்கு காலை 9.30 மணி, 10-ம் வகுப்பிற்கு மதியம் 12 மணி!

By காமதேனு

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 10-ம் வகுப்பு தேர்வை 9.5 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை 8.3 லட்சம் மாணவர்களும் எழுதினர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 20) வெளியிடப்பட உள்ளன. அதன்படி பிளஸ் 2-க்கு காலை 9.30 மணிக்கும், 10-ம் வகுப்புக்கு மதியம் 12 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய வலைதளங்களில் அறிந்து கொள்ளலாம். இதுதவிர மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்துமைய, கிளை நூலகங்கள் மற்றும் மாணவர்கள் படித்த பள்ளிகளில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் பதிவு செய்த கைபேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

அதேபோல், அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான வழிகாட்டுதல்கள் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளன என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
பிளஸ் 1 தேர்வு ரிசல்ட் எப்போது?

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததை அடுத்து, தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 8.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. பிளஸ் 1 தேர்வு முடிவு ஜூலை 7-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கு முன்பாகவே முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதி கிடைத்த பிறகு இதுதொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE