திருமணத்தை விமானத்துல நடத்துறதா பிளான்!

By மு.அஹமது அலி

ஒருபக்கம் கேரளத்து செண்டை மேளம். மறுபக்கம் அரை மணி நேரமாக அயராது வெடித்த பட்டாசு சத்தம். இதற்கு நடுவே 16 சக்கரம் பொருத்திய 2 கண்டெய்னர் லாரிகளில் பெண்ணுக்கு சீர் வரிசை சாமான்கள் மெதுவாக ஊர்ந்து வந்தது. இத்தனை தடபுடலாக யாருடைய திருமணம் என விசாரித்தால், திருமணம் இல்லை பூப்புனித நீராட்டு விழா என்றார்கள்.

மதுரையின் புறநகர் பகுதியான ஊமச்சிகுளம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் தான் மகள் ஜெனித்தாவின் பூப்புனித நீராட்டு விழாவை கடந்த 12-ம் தேதி இப்படி ஊர்மெச்ச நடத்தினார். காண்ட்ராக்டரான சக்திவேல் இதற்கு முன்பு யாரும் இப்படியொரு பூப்புனித நீராட்டு விழாவை நடத்தியதில்லை என்று பார் புகழவேண்டும் என்பதற்காக இத்தனை பகட்டாக மகளின் பூப்புனித நீராட்டை நடத்தினாராம்.

மகளுக்கு விழா எடுத்த மகிழ்வில் இருந்தவரை அலைபேசியில் பிடித்துப் பேசினோம். ”நானும் என் மனைவி ரேவதியும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. ரேவதி வீட்டுல எங்க கல்யாணத்தை ஏத்துக்கிட்டாங்க. எங்க வீட்டுல எத்துக்கல. அப்பா மட்டும் அப்பப்போ பேசுவாரு. இவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும்கிற லட்சியத்தோட உழைச்சுச் சம்பாதிக்க ஆரம்பிச்சேன். நாலு மாடி வெச்சு வீடு கட்டுனேன். எங்க ஊர்லயே வீட்டுக்கு ஏ.சி. போட்ட முதல் ஆளும் நான் தான். இப்படி எல்லாத்தையும் ஸ்பெஷலா செஞ்சுட்டு வந்த நான், என் மகளோட சடங்கையும் (பூப்புனித நீராட்டு விழா) பிரம்மாண்டமா நடத்தணும்னு பிளான் போட்டேன்” என்று நிறுத்தினார் சக்திவேல்.

விழா மண்டபத்துக்கு மகளை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து அசத்துவதுதான் சக்திவேலுவின் முந்தைய திட்டமாம். ஆனால், அதற்கான வாடகை அதிகமாக இருந்ததாலும் பர்மிஷன் வாங்குவதில் சில பல சிரமங்கள் இருந்ததாலும் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாராம்.

அதுகுறித்தும் உற்சாகத்துடன் பேசிய சக்திவேல், ”ஹெலிகாப்டர் பிளான் வொர்க் அவுட் ஆகலைன்னதும் வேற என்ன மாதிரி அசத்தலாம்னு யோசிச்சோம். ஏற்கெனவே, திருவாரூர்ல 6 பேர் சேர்ந்து ஒரு கண்டெய்னர் லாரில சீர்வரிசை கொண்டு வந்ததா சொன்னாங்க. அது மாதிரி நம்மளும் ஏன் ட்ரை பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு. அதுக்காக ரெண்டு கண்டெய்னர் லாரிகளை ரெடி பண்ணினோம். என்னோட மூணு மச்சினனுங்களும் சேர்ந்து சீர் எடுத்துட்டு வந்தாங்க. அதுல ஒரு லாரி முழுக்க பித்தளை பாத்திரம், இன்னொரு லாரியில என் மகள் உயரத்துக்கு ஐந்தே கால் அடியில் 2 குத்து விளக்கு உள்ளிட்ட மற்ற சீர் சாமான்கள் வந்துச்சு.

கேரள செண்டை மேளத்தை அதிரவிட்டதோட இல்லாம 45 ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கி அரை கிலோ மீட்டருக்கு வெடிச்சோம். மூவாயிரம் பத்திரிகை அடிச்சேன். 35 ஆடு வெட்டுனோம். 250 கிலோ சிக்கன் போட்டோம். 5 ஆயிரம் பேருக்கு மணமா சாப்பாடு. கண்டெய்னர்ல வந்த சீர்வரிசை மதிப்பு மட்டும் 4.75 லட்ச ரூபாய். இது மச்சினன்களோட செலவு இந்த ஃபங்ஷனை நடத்த எனக்கு 18 லட்சம் செலவாச்சு. ஹெலிகாப்டர் எடுத்துருந்தா இன்னும் செலவு ஜாஸ்தி ஆகிருக்கும்” என்றார்.

கண்டெய்னர் லாரியில் சீர்...

“பொண்னோட பூப்புனித நீராட்டு விழாவையே இத்தனை அமர்க்களப்படுத்துன நீங்க திருமணத்துக்கும் ஏதாச்சும் மெகா பிளான் போட்டு வெச்சிருப்பீங்களே?” என்று கேட்டதற்கு, "நிச்சயமா, திருமணத்தை இத விட பிரம்மாண்டமா நடத்த ஒரு பிளான் இருக்கு. சடங்க இவ்ளோ கிராண்டா பண்ணுனதுக்குக் காரணம், திருமணத்தப்போ மாப்பிள்ளை வீட்டுல நாம செய்யிற விஷயங்களை ஏத்துப்பாங்களான்னு தெரியல. பாப்பாவ கட்டிக்கொடுக்கும் போது இப்படிலாம் செய்ய முடியாதோன்னு தான் இப்பவே செஞ்சி முடிச்சேன். ஒருவேளை, திருமணத்தப்போ மாப்பிள்ளை வீட்ல ஓகே சொன்னா, மகளோட திருமணத்தை விமானத்துலயே நடத்தலாம்னு இருக்கேன்” என்றார்.

மருமகளுக்கு கண்டெய்னர் லாரியில் சீர் எடுத்து வந்த சக்திவேலுவின் மைத்துனர்களின் ஒருவரான பிரபாகரன் நம்மிடம், "எங்க அக்கா வீட்டு விசேஷத்தை கிராண்டா பண்ணணும்னு ஒரு ஆசை. இதுக்காகவே ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருந்தோம். ரெண்டு பேரும் கலப்புத் திருமணம் செஞ்சுகிட்டதால மாமா வீட்டில சப்போர்ட் இல்லை. ஆனா, எங்க வீட்டுல நாங்க எல்லோரும் அவங்களுக்கு நல்ல சப்போர்ட். மாமாவ, அவங்க குடும்பத்துல எந்த ஒரு விசேஷத்துக்கும் அழைச்சது கிடையாது. எங்க அப்பாவோட மூத்த தாரத்து மகள் தான் எங்க அக்கா ரேவதி. ஒரே பொண்ணு. தன்கூட யாரும் பிறக்கலைங்கிற ஒரு எண்ணம் அவங்களுக்கு வந்துடக்கூடாதுன்னு நானும் தம்பிகளும் நினைச்சோம். அவங்ககூட யாராவது பிறந்திருந்தாங்கன்னா எத்தனை விமர்சையா செய்முறை செஞ்சிருப்பாங்களோ, அத விட சிறப்பா பண்ணணும்னு ஆசை. அதனாலேயே, ரொம்ப நாள் பிளான் பண்ணி சடங்க செம்ம கிராண்டா நடத்தினோம். எங்க அக்கா, மாமா ரெண்டு பேருக்குமே அளவு கடந்த சந்தோஷம். எங்க உங்ககூட நாங்க இருக்கோம்னு அக்காவுக்கு தைரியம் குடுக்கறதுக்காகவே இந்த சீர இவ்வளவு பிரமாதமா செஞ்சோம்" என்றார் ஆனந்தமாக.

கண்டெய்னர் லாரியில் சீர்

செண்ட மேளத்துடன் வரும் சீர் வரிசை

மகளின் திருமணத்தை விமானத்தில் நடத்த இப்போதே திட்டம் வைத்திருக்கும் சக்திவேலுவுக்கு மருமகனாக வரும் வரம் யாருக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE