`இரவு 8 மணிக்கு கடைகள், சந்தைகளை மூடுங்கள்': மின்சாரம், எரிபொருளை சேமிக்க பிரதமர் அதிரடி உத்தரவு

By காமதேனு

எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிக்கும் முயற்சியாக, நாடு முழுவதும் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளை இரவு 8 மணிக்குப் பிறகு மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக மின்சாரம் மற்றும் எரிபொருள்களை சேமிப்பதற்காக, நேற்று இரவு பிரதமர் அலுவலகத்தின் நிர்வாக இயக்குநர் அஹ்சன் கிப்ரியா சித்திக் கையொப்பமிட்ட சுற்றறிக்கையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள பொதுப் பாதுகாப்புப் பிரிவு, வர்த்தக அமைச்சகம், எரிசக்தி மற்றும் கனிம வளப் பிரிவு, உள்ளாட்சிப் பிரிவு, தொழில் அமைச்சகம், அனைத்துப் பிரிவு ஆணையர்கள், காவல்துறை ஜெனரல்கள் ஆகியோர் வங்கதேச தொழிலாளர் சட்டம் 2006-ன் பிரிவு 114-ன் படி இந்த உத்தரவை கண்டிப்பாக செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உக்ரைன் -ரஷ்ய போர் மற்றும் கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள் கடுமையான எரிபொருள் மற்றும் மின்சார பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. இலங்கை, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்காக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, முன்னெச்சரிக்கையாக வங்கதேச அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE