பாகிஸ்தான் உளவுப்பெண்ணின் வலையில் சிக்கிய டிஆர்டிஓ பொறியாளர்: ரகசிய தகவல்களை பகிர்ந்ததால் கைது

By காமதேனு

இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் குறித்த தகவல்களை பாகிஸ்தானிய உளவாளியுடன் பகிர்ந்து கொண்டதற்காக டிஆர்டிஓ ஆய்வகப் பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தில் (டிஆர்டிஎல்) பணியாற்றும் பொறியாளர் ஒருவர், இங்கிலாந்தை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி பெண்ணின் 'ஹனிடிராப்பில்' சிக்கி இந்தியாவின் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த முக்கியமான தகவல்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டார் என்று தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்கள், ஒரு சிம் கார்டு மற்றும் லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.

குற்றம் சாட்டப்பட்ட மல்லிகார்ஜுன ரெட்டி (29), விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர், இவர் பாலாபூரில் உள்ள டிஆர்டிஎல்லின் அட்வான்ஸ் நேவல் சிஸ்டம் திட்டத்தின் ஒப்பந்த தரக்காப்பீட்டுப் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார்.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிஆர்டிஎல் திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு, மல்லிகார்ஜுன ரெட்டி டிஆர்டிஎல்லை அணுகி 2020-ல் ஏஎன்எஸ்பி திட்டத்தில் ஒப்பந்த ஊழியராக சேர்ந்தார். அவர் டிஆர்டிஎல் நிறுவனத்தில் பணிபுரிவதாக தனது ஃபேஸ்புக் சுயவிவரத்தில் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 2020-ல் நடாஷா ராவ் ,மல்லிகார்ஜுன ரெட்டிக்கு ஃபேஸ்புக்கில் நட்புக் கோரிக்கை விடுத்தார். தான் பிரிட்டனில் உள்ள பத்திரிகையாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், தான் முன்பு பெங்களூருவில் தங்கியிருந்ததாகவும், தனது தந்தை இந்திய விமானப்படையில் பணிபுரிந்து பின்னர் பிரிட்டன் சென்றதாகவும் சொல்லியுள்ளார். அந்த பாகிஸ்தான் உளவாளி பெண்ணின் வலையில் சிக்கிய மல்லிகார்ஜுன ரெட்டி, ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் குறித்த தகவல்களை அவரிடம் பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் டிசம்பர் 2021 வரை தொடர்பில் இருந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE