தூத்துக்குடியில் முதியவரை வெட்டிக்கொலை செய்த அவரது உறவினர்கள் மூன்றுபேரை போலீஸார் கைதுசெய்தனர். பேத்தி வீட்டுக்குச் சென்ற முதியவரை உறவினர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவமாயன் காலனியைச் சேர்ந்தவர் முனியசாமி. 70 வயதான இவர் மீன்பிடித் தொழில் செய்துவந்தார். இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும், இரு மகன் மற்றும் இருமகள்கள் உள்ளனர். இவரது பேத்தி முத்துமாலை(20) என்பவருக்கும், திரேஸ்புரத்தைச் சேர்ந்த மாரி(24) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர்களின் இரு குடும்பத்திற்கும் இடையே மோதல் இருந்துவந்தது. இந்நிலையில் முனியசாமி, தனது பேத்தி முத்துமாலையைப் பார்க்க நேற்று இரவு அவரது வீட்டிற்குப் போனார்.
அவரைப் பார்த்ததும், ஆத்திரம் அடைந்த மாரியின் சகோதரர்கள் சேர்மன், சின்னத்தம்பி, அவர்களது உறவினர் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ஓட்டை என்ற கருப்பசாமி ஆகிய மூவரும் முனியசாமியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் முனியசாமி மயங்கினார். இதனிடையே பேத்தி வீட்டுக்குச் சென்ற பெரியசாமியைக் காணவில்லை என அவரைத் தேடி உறவினர்கள் வந்தனர். அங்கு ரத்தவெள்ளத்தில் கிடந்த முனியசாமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிர் இழந்தார். இவ்விவகாரத்தில் தாத்தாவைக் கொன்ற உறவினர்கள் சேர்மன், சின்னத்தம்பி, கருப்பசாமி மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.