100-வது பிறந்தநாள் காணும் தாய்க்கு பாதபூஜை செய்த பிரதமர் மோடி!

By காமதேனு

இன்று தனது 100-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் தாய் ஹீராபென் மோடியை சந்தித்து அவருக்கு பாதபூஜை செய்து வணங்கினார் பிரதமர் மோடி.

இன்று காலையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இல்லத்தில் தாய் ஹீராபென் மோடியை சந்தித்து அவருக்கு பாத பூஜை செய்து வணங்கினார் பிரதமர் மோடி. அதன்பின்னர் இருவரும் ஒன்றாக கடவுள்களுக்கு பூஜை செய்து தாயிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

தாயின் பிறந்தநாள் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டில்,“என் தந்தை உயிருடன் இருந்திருந்தால், அவரும் கடந்த வாரம் தனது 100-வது பிறந்தநாளை நிறைவு செய்திருப்பார். 2022-ம் ஆண்டு எனது தாயாரின் நூற்றாண்டு விழா தொடங்கும் ஒரு சிறப்பான ஆண்டாகும். மேலும் இப்போது எனது தந்தை தனது பிறந்த நாளை நிறைவு செய்திருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "எனது வாழ்க்கையில் நல்லவை, என் குணத்தில் உள்ள நல்லவை அனைத்துக்கும் என் பெற்றோர் காரணமாக இருக்கலாம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இன்று, நான் டெல்லியில் அமர்ந்திருக்கும்போதும் ​​கடந்த கால நினைவுகளால் நிரம்பியிருக்கிறேன். அம்மா வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க சில வீடுகளில் பாத்திரங்களைக் கழுவி வந்தார். எங்களின் சொற்ப வருமானத்திற்கு துணையாக ராட்டையில் நூல் சுற்றவும் செய்தார். பருத்தி உரிப்பது முதல் நூல் நூற்பு வரை அனைத்தையும் அவர் செய்வார். இந்த முதுகு உடைக்கும் பணியில் கூட, பருத்தி முட்கள் எங்களை குத்தாமல் பார்த்துக் கொள்வதே அவரது முக்கிய அக்கறையாக இருந்தது” என்று உருகியபடி பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் தாயாரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, காந்திநகரில் ரெய்சன் பகுதியில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE