சென்னையிலும் வெடித்தது ‘அக்னிபத்’ போராட்டம்: தலைமைச் செயலகத்தை இளைஞர்கள் முற்றுகையிட முயற்சி!

By காமதேனு

'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக ராணுவ தேர்வு எழுதக் காத்திருந்த மாணவர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த போராட்டத்தின் காரணமாக வட மாநிலங்களில் ரயில்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. மேலும், பாஜக அலுவலகங்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதனால் தமிழகத்திலிருந்து பிஹார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட மாநிலத்தினர் அதிகம் பணிபுரியும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் காவ ல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடுமையான சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராகத் தமிழகத்தில் போராட்டங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் இன்று முதல் முறையாகச் சென்னையில் போராட்டம் இன்று வெடித்துள்ளது. தலைமைச் செயலகத்திற்கு முன்பாக இருக்கும் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகே இந்திய ராணுவத்தில் பயிற்சி பெறக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரணி, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த மாணவர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தி அவர்களிடம் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், ”உடல் ரீதியாக மருத்துவ தேர்ச்சி பெற்ற பிறகு, நாங்கள் தேர்வு எழுதக் காத்திருக்கிறோம். இந்த சூழலில் 'அக்னிபத்' திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால் நாங்கள் தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் கொண்டு, இந்த திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE