அமெரிக்காவிலிருந்து 37 ஆண்டுகளுக்கு மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்!

By மு.அஹமது அலி

37 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு ஐம்பொன் சிலைகள் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

மதுரையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையின் இயக்குனர் ஜெயந்த் முரளி மற்றும் ஐஜி தினகரன் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அவர்கள் கூறுகையில், "1985-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள அருள்மிகு நரசிங்கநாதர் கோயிலில் இருந்து 11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கங்காள நாதர் மற்றும் அதிகார நந்தி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்டு காணாமல் போனது.

1986-ம் ஆண்டு சிலைகளை மீட்க முடியாமல் உள்ளூர் காவல்துறையினரால் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு சிலைகளும் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகர அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இவற்றை யார் கடத்தியது, எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

வெளி நாடுகளில் இருந்து இதுவரை 22 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஒரே ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. இன்னும் 40-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட வேண்டும். மதுரையிலுள்ள மரகதலிங்கம் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது" என்றனர்.

மேலும், "மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலைகள் காணாமல் போன வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள சிலைகள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட சுபாஷ் கபூர் மீது மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ளார்" என்றனர்.

இதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட கங்காள நாதர் மற்றும் அதிகார நந்தி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குனர் ஜெயந்த் முரளி, காவல்துறை தலைவர் தினகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி ஆகியோர் கோயில் செயல் அலுவலர் கண்ணதாசனிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE