`36 என்' பஸ்சில் ஓட்டை இருக்கு; அசம்பாவிதம் நடக்கும்முன்பு சரிசெய்யுங்கள்'- அதிகாரியை தெறிக்கவிட்ட 4-ம் வகுப்பு மாணவியின் கடிதம்

By என்.சுவாமிநாதன்

நாகர்கோவிலில் தனியார் பள்ளிகளின் வாகனங்களில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் ஆய்வுப் பணிகள் இன்று நடந்தது. இதேநேரத்தில் தான் வந்த அரசுப்பேருந்தில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்யக்கேட்டு நான்காம் வகுப்பு மாணவி போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருக்கும் சம்பவம் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

நாகர்கோவில் வட்டார போக்குவரத்துக்கழகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களின் தணிக்கை கன்கார்டியா பள்ளி வளாகத்தில் வைத்து இன்று நடைபெற்று வருகிறது. இதில் தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான வாகனங்கள் பங்கெடுத்து வருகின்றன. அவற்றில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்வதற்கு வசதியாக தீயணைப்பான் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? பேருந்து நல்ல தகுதியோடு இருக்கிறதா? என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் பலரும் பொதுப் போக்குவரத்தை நம்பியே உள்ளனர்.

அவர்கள் அரசு பேருந்துகளில் தமிழக அரசின் மாணவர் பயண அட்டையைப் பயன்படுத்தி இலவசமாகவே பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் கோட்டாறில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் அரசு பள்ளியின் நான்காம் வகுப்புப் மாணவி ஜெய் மிருத்திகா தன் ஊரில் இருந்து, வந்த பேருந்தில் ஓட்டை, உடைசல் இருப்பதையும் அதனால் குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் நாகர்கோவில் ராணித்தோட்டம், போக்குவரத்துக் கழக பொதுமேலாளரிடம் தன் கைப்பட எழுதிய புகார் மனுவைக் கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், “36 என் பேருந்தில் பள்ளிக்கு வந்தேன். பேருந்தின் உட்புறத்தில் இருக்கையின் கால் பகுதியில் தோராயமாக 8 இஞ்ச் அளவுக்கு ஓட்டை உள்ளது. காலையிலும், மாலையிலும் பள்ளி போய், வர சிறுகுழந்தைகள் இந்தப் பேருந்தை பயன்படுத்த வேண்டி உள்ளது. ஆகையால் வேறு அசம்பாவிதம் நடக்கும்முன்பு இதைச் சரிசெய்ய வேண்டும்” என மனு கொடுத்துள்ளார்.

அரசு, தனியார் பள்ளிகளை ஆய்வுசெய்துவரும் சூழலில் அரசுப் பேருந்துகளில் இருக்கும் குறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE