உடைந்து கிடந்த தண்டவாளம்... மின்னல் வேகத்தில் வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்: உயிரை பணயம் வைத்து ரயிலை நிறுத்திய ஊழியர்

By காமதேனு

ரயில் வந்து கொண்டிருக்கும் போது தண்டவாளத்தில் உடைப்பு இருப்பதை கண்ட கேங் கீமேன் சிவப்பு கொடி அசைத்து ரயிலை நிறுத்திய சம்பவம் ராமநாதபுரத்தில் அரங்கேறி உள்ளது.

சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 6.40 மணிக்கு ராமநாதபுரம் வந்தது. தொடர்ந்து, 6.55 மணிக்கு வாலாந்தரவை வந்தடைய இருந்தது. அப்போது, வழக்கமாக ரயில்பாதையை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் ராமநாதபுரத்தை சேர்ந்த எட்டாவது கேங் கீமேன் வீரபெருமாள். அப்போது, ரயில் நிலையம் அருகே இருந்த ரயில் தண்டவாளம் உடைந்து இருப்பதை கண்டுள்ளார்.

வீரபெருமாள்

தண்டவாளம் உடைந்த நிலையில் ரயில் தூரத்தில் வருவதை கண்ட வீரபெருமாள் சிவப்பு கொடியை காட்டியபடி உயிரைப் பணயம் தண்டவாளத்தில் சுமார் 200 மீட்டர் ஓடி ரயிலை நிறுத்தச் சொன்னார். ரயில் நிறுத்தப்பட்டு இன்ஜின் பகுதி மட்டும் உடைந்த பகுதியை கடந்து நின்றது.

இதனால் ரயில்தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. ரயில் விபத்தை தடுத்த கீமேன் வீரப்பெருமாளை வாலாந்தரவை கிராம மக்கள் பாராட்டினர். அதன்பின் உடைந்த பகுதியில் புஷ் பிளேட் பொருத்தி இணைக்கப்பட்டு ஒரு மணிநேரம் தாமதமாக ரயில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றது.

கேங் கீமேனின் சாமர்த்திய முயற்சியால் மிகப் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE