நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த கொள்ளையர்கள்: அதிர்ச்சி கொடுத்து நூதன தண்டனை வழங்கிய பொதுமக்கள்

By காமதேனு

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் பைக்கைத் திருட வந்த வாலிபர்களை பொதுமக்கள் கையும், களவுமாகப் பிடித்து விடிய, விடிய போஸ்ட் கம்பத்தில் கட்டிவைத்து நூதன தண்டனைக் கொடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதியில் அண்மைக்காலமாக தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆரல்வாய்மொழி, தெற்கு பெருமாள்புரம் கன்னிவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் இருசக்கர வாகனத்தை நேற்று நள்ளிரவில் இரண்டுபேர் திருட முயன்றனர். இதைப் பார்த்த சந்திர குமார் ஊர்மக்களின் உதவியோடு அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தார். உடனே அந்த இருவரையும், அருகில் இருந்த மின்கம்பத்திலேயே ஊர்மக்கள் சேர்ந்து கட்டிவைத்துவிட்டு போலீஸிற்கு புகார் சொன்னார்கள். வாலிபர்கள் இருவரும் தங்கள் பெயர், முகவரியை சொல்லாமல் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொல்லி வந்தனர்.

இன்று காலையில் ஆரல்வாய்மொழி போலீஸ் ஆய்வாளர் மீனா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீஸார், அப்போது கட்டிவைக்கப்பட்டிருந்த பைக் திருடர்களிடம் முதலில் விசாரணை நடத்தாமல், அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றார். மேலும் அவர்களைத் தாக்கியதாக பொதுமக்களையும் காவல்நிலைய விசாரணைக்கு அழைத்தனர். இதைக்கண்டித்து பொதுமக்கள் நாகர்கோவில்- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் குற்றவாளிகளைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE