ஒடிசாவில் கட்டாக் மாவட்டத்தில் உள்ள அத்தகர் வனப்பகுதியில் யானைகள் தொடர்ந்து கொல்லப்படுவது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை ஒடிசா மாநில அரசு அமைத்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து அத்தகர் வனப் பிரிவில் நான்கு யானைகள் பலியாகியுள்ளன. ஜூன் 2 மற்றும் 3-ம் தேதிகளில் குற்றப்பிரிவு சிறப்பு அதிரடிப்படையினர் அத்தகர் பகுதியில் உள்ள காடுகளில் இருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் யானையின் சடலங்களை தோண்டி எடுத்தனர். பிறகு ஜூன் 14 அன்று, கொன்று புதைக்கப்பட்ட ஆண் யானையின் சடலம் அதே பகுதியில் தோண்டி எடுக்கப்பட்டது. ஜூன் 15-ம் தேதி நரசிங்கப்பூர் வனப்பகுதியில் ஒரு ஓடை அருகே துப்பாக்கிச்சூடு காயங்களுடன் உயிரிழந்த யானையின் சடலம் மீட்கப்பட்டது. அடுத்தடுத்து இரு வாரங்களில் 4 யானைகள் கொல்லப்பட்ட சம்பவம் ஒடிசாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
யானைகள் கொல்லப்படுவது குறித்த சரியான காரணங்களைக் கண்டறிய வனங்களின் தலைமைப் பாதுகாவலர் தலைமையில் உயர்மட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று ஒடிசா வனத்துறையின் முதன்மை தலைமைப் பாதுகாவலர் சஷி பால் நேற்று தெரிவித்தார். யானைகள் இறந்தது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஒடிசா அரசிடம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநில வனத்துறை ஏற்கெனவே வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மூன்று வனக் கண்காணிப்பாளர்கள் மற்றும் வனக்காவலர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது. தப்பியோடிய இரண்டு வனத்துறையினரை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மூன்று ரேஞ்ச் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தந்தங்களுக்காக வனத்துறையினரின் உதவியுடன் யானைகள் வேட்டையாடப்படுவதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.