சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி விஜயவாடாவில் இருந்து கொண்டு வந்த 46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இன்று பினாகினி விரைவு ரயில் வந்தது.அந்த ரயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் அந்த நபரை பிடித்து சோதனையிட்டனர்.
அப்போது அவரது பையில் 46 லட்ச ரூபாய் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரவி(56) என்பதும், நகை வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும் வேலூரில் உள்ள நகை வியாபாரி நாராயணனுக்கு நகை விற்பனை செய்து விட்டு அதற்குண்டான பணம் 46 லட்ச ரூபாயை விஜயவாடாவில் சென்று வாங்கிக் கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் ரவியிடம் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. அதனால் போலீஸார், பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 46 லட்ச ரூபாய் ஹவாலா பணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும், பிடிபட்ட பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.