'1 லிட்டர் கழுதைப்பால் விலை 5,000: ஐடி வேலையை உதறிவிட்டு கழுதைப்பண்ணை நடத்தும் ஆச்சரிய மனிதன்!

By வீரமணி சுந்தரசோழன்

மங்களூருவில் ஸ்ரீனிவாஸ் கவுடா என்பவர் தனது ஐடி பணியை துறந்துவிட்டு கழுதைப் பாலுக்காக கழுதைப் பண்ணையை நடத்தி வருகிறார்.

மங்களூருவில் கழுதைப் பால் பண்ணை தொழிலைத் தொடங்கியுள்ள ஸ்ரீனிவாஸ் கவுடா, "நான் இதற்கு முன்பு 2020 -ம் ஆண்டு வரை ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அதன்பின்னர் சுமார் 42 லட்ச ரூபாய் முதலீடு செய்து 20 கழுதைகளை வளர்த்து வருகிறேன். இது தான் இந்தியாவிலும் கர்நாடகாவிலும் முதல் கழுதை வளர்ப்பு மற்றும் பயிற்சி மையம் ஆகும். இதன் மூலம் அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது கனவு, கழுதைப் பால் ஒரு மருந்து சூத்திரம்”என்று கூறினார்.

42 வயதான ஸ்ரீனிவாஸ் கவுடா ஜூன் 8-ம் தேதி தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஈரா கிராமத்தில் 2.3 ஏக்கர் நிலத்தில் கர்நாடகாவின் முதல் கழுதை பால் பண்ணையை உருவாக்கினார். இது தொடர்பாக பேசிய அவர், "கழுதைகளின் அவல நிலையைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன். அவை பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் சலவை இயந்திரங்கள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, கழுதைகளின் பயன்பாடு குறைந்துவிட்டது. இதனால் கழுதை இனங்கள் அழிந்து வருகின்றன, எனவே கழுதைப்பண்ணை தொடங்க முடிவு செய்தேன். கழுதைப் பண்ணை தொடங்கும் யோசனையைப் பகிர்ந்து கொண்டபோது பலர் கேலி செய்தனர்.

பாக்கெட்டுகளில் மக்களுக்கு பெரிய அளவில் கழுதைப் பால் வழங்க திட்டமிட்டுள்ளேன். 30 மிலி கழுதைப்பால் பாக்கெட் ஒன்றின் விலை 150 ரூபாய் வரையும், ஒரு லிட்டர் 5 ஆயிரம் ருபாய் வரையும் விற்கப்படுகிறது. கழுதைப் பால் அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுவதால், அத்தகைய பொருட்களைத் தயாரிக்கும் பிராண்டுகள் மற்றும் நிறுவனங்களுக்கு பாலை விற்க திட்டமிட்டுளேன். ஏற்கனவே கையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான ஆர்டர்கள் உள்ளது" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE