கனமழையால் திடீர் காட்டாற்று வெள்ளம்: ஓடையை கடக்கும்போது பெண்ணுக்கு நடந்த சோகம்

By காமதேனு

கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், கூக்கல் தொரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை ஐந்து மணி அளவில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. அப்போது அதிக மழை பெய்து விவசாயம் செய்யக்கூடிய விளை நிலங்கள், சாலைகள் எங்கும் மழைநீர் தேங்கி காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. அப்போது தீனட்டி பகுதியை சேர்ந்த ஆலம்மாள் என்பவர் தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு சென்று அதிக மழை பெய்து வருவதால் வீட்டிற்கு திரும்பும்போது தரைப்பாலம் முற்றிலுமாக அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தரைப்பாலத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

அப்போது ஆலம்மாள் என்பவர் எதிர்பாராமல் சாலை என்று நினைத்து சிறு ஓடையை தாண்டும் போது வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டார். இரவு நேரம் ஆகியும் ஆலம்மாள் வீடு திரும்பாத நிலையில் அவரது மகன்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் இரவு 12 மணி வரை உறவினர்களின் வீடுகள், விளைநிலங்கள், சாலைகள் போன்ற பகுதிகளில் தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் ஆலம்மாளை கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்று காலை மீண்டும் தேடும் போது இறந்த நிலையில் கூக்கல்தொரை அருகேயுள்ள மசகல் பகுதியில் ஆற்று ஓரம் முட்புதரில் சிக்கி நிலையில் ஆலம்மாள் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து கோத்தகிரி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு உடலை கைப்பற்றி, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக கோட்பாட்டில் 30 மி.மீ. மழை பதிவானது. உதகையில் 10.2, தேவாலாவில் 21, அப்பர் பவானியில் 29, கெத்தையில் 15, பாலகொலாவில் 25 மி.மீட்டர் மழை பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE