பிரதமர் மோடியின் அன்னை ஹீராபென், ஜூன் 18-ல் தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார். இதையொட்டி அவரை கெளரவிக்கும் விதமாக குஜராத் தலைநகரான காந்திநகரில், ராய்சன் பெட்ரோல் பம்ப்பில் தொடங்கும் ‘80 எம்டிஆர்' சாலை, ‘பூஜ்ய ஹீராபா மார்க்’ எனப் பெயர் மாற்றம் பெறுகிறது. காந்திநகர் மக்களின் கோரிக்கைக்கு இணங்க, ஹிராபென்னின் பெயர் இந்தச் சாலைக்கு வைக்கப்படுவதாக காந்திநகர் மேயர் ஹிதேஷ் மக்வானா தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹீராபென்னின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கவும், துறவுநிலை, தவம், சேவை குணம் மற்றும் லட்சிய மனம் குறித்த பாடங்களை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஹிதேஷ் மக்வானா கூறியிருக்கிறார்.
1923 ஜூன் 18-ல் பிறந்த ஹீராபென், பிரதமர் மோடியின் தம்பியான பங்கஜ் மோடியுடன், ராய்சன் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்துவருகிறார். காந்திநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ராய்சன், காந்திநகர் மாநகராட்சியின் கீழ் வருகிறது. பிரதமர் மோடி தனது பிறந்தநாளின்போது தனது தாயாரிடம் ஆசி வாங்க அங்கு செல்வது உண்டு.
இந்த முறை தனது தாயின் 100-வது பிறந்தநாளில் அவரை வாழ்த்தி, ஆசிர்வாதம் பெற ராய்சனுக்குச் செல்லவிருக்கிறார்.