எம்.ஜி.எம் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. விழுப்புரத்தில் நடந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களை ஊழியர்கள் வயலில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எம்.ஜி.எம் குழுமம் தமிழகம் பெங்களூரு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏற்றுமதி இறக்குமதி, மதுபான தயாரிப்பு, மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள், வெளிநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. 1963-ம் ஆண்டு எம்.ஜி முத்து என்பவரால் எம்ஜிஎம் குழுமம் தாெடங்கப்பட்டு ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் முதன்முதலில் கால்பதித்து. பின்னர் படிப்படியாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் இக் குழுமம் தற்போது தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் நிறுவனங்களைத் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
இக்குழுமத்தின் பெயரில் அம்யூஸ்மெண்ட் பார்க் ஒன்று சென்னையில் இயங்கி வருகிறது. இதன் மூலம் இந்திய அளவில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக எம்.ஜி.எம் குழுமம் திகழ்வதுடன் தற்போது ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை எம்ஜிஎம் குழுமம் குவித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் தமிழகம், பெங்களூரு உட்பட எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, நெல்லை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் சாந்தோம் முத்து பாண்டியன் அவென்யூ சாலையில் உள்ள மாறன் வீடு, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கார்ப்ரேட் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்புப் புகாரின் அடிப்படையில் இச்சோதனைகள் நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.எம் குடும்பத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரத்தில் நடந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களை ஊழியர்கள் வயலில் வீசினர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே கடந்த 2007, 2011, 2012 நிதி ஆண்டுகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக ரிசர்வ் வங்கி சார்பில் அமலாக்கத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்.ஜி.எம் மாறன் சிங்கப்பூரில் பல கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை வங்கியில் வைத்துக் கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்ததை அமலாக்கத்துறை கண்டுபிடித்து அவருக்கும் 35 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் எம்.ஜி.எம் மாறனுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
வருமான வரித்துறை சோதனை முடித்த பின்னரே வரி ஏய்ப்பு தொடர்பான முழு விவரம் தெரியவரும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.