லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் அபாயம்: `அக்னிபாத்' திட்டத்துக்கு எதிராக வெடித்தது இளைஞர்களின் போராட்டம்!

By காமதேனு

4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் முப்படைகளில் ஆள் சேர்க்கும் மத்திய அரசின் 'அக்னிபாத்' திட்டத்துக்கு எதிராக பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மாநிலங்களில் உள்ள பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.

கரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக 2020-ல் நிறுத்தப்பட்ட ராணுவ ஆட்சேர்ப்பு செயல்முறை மீண்டும் தொடங்கப்படும் என்று காத்திருந்த இளைஞர்கள், தற்போது அறிவிக்கப்பட்ட 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்தினால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் மாநிலம் பக்ஸரில் பாட்னா செல்லும் பாடலிபுத்ரா எக்ஸ்பிரஸ் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். முசாபர்பூர் ரயில் நிலையம், பகவான்பூர் சௌக், மடிபூர் சௌக் மற்றும் சக்கர் கிராசிங் அருகே சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி, பெகுசராயில் இரண்டு மணி நேரம் என்ஹெச் -31 தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போஜ்பூர் மாவட்டத் தலைமையகமான ஆராவில் பகுதியில் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து டயர்களை எரித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் உத்தர பிரதேசத்தில் லக்னோ பகுதிகளிலும் இத்திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. பல மாநிலங்களிலும் இத்திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஆட்சேர்ப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இது பின்னடைவாக இருக்கும். மேலும் அக்னிபாத் திட்டத்தில் வேலைக்கு சேர்ந்து 24-25 வயதில் ஓய்வு பெற்றவுடன், ராணுவ வீரர்களை அது குழப்பத்தில் ஆழ்த்திவிடும்” என்று யுவ ஹல்லா போல் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ரிஷவ் ரஞ்சன் தெரிவித்தார்.

அக்னிபாத் திட்டம் என்றால் என்ன?

4 ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்த முறையில் பணியாற்றும் வகையில் 17.5 வயது முதல் 21 வயது வரை ஆண், பெண் இருபாலரும் இத்திட்டம் மூலமாக முப்படைகளில் இணையலாம். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். 4 ஆண்டுகள் பணி நிறைவு பெறும்போது இவர்களுக்கு 11.7 லட்சம் ரூபாய் சேவை நிதி வழங்கப்படும். இதற்காக பணியாளர்களின் சம்பளத்தில் மாதம் 30% ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.

பணிக்காலம் நிறைவடைந்தவுடன் இவர்களில் 25 சதவீதம் பேருக்கு தகுதியின் அடிப்படையில் மீண்டும் ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றும் வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. ஆயுதப் படைகள் இந்த ஆண்டு 46,000 அக்னிவீரர்களை நியமிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4 ஆண்டுகளில் பணி நிறைவுக்கு பின்னர் மத்தியப் படை பணிகளில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், மேலும் அவர்களின் பணிக்காலப் பயிற்சியானது இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான கல்வித் தகுதியாக கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE