குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லியில் நடத்திய கூட்டத்தில் ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் கலந்துகொள்ளவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் தனித்து முடிவெடுக்க இருப்பதாகத் தெரிகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் சார்பில் டெல்லியில் நேற்று கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள 22 எதிர்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு விடுத்திருந்தார். நவீன் பட்நாயக்குக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அக்கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டார். 17 தலைவர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதன் பின்னணியில் சில முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒடிசாவின் நலனைக் கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலை நவீன் பட்நாயக் அணுகுகிறார். இந்தத் தேர்தலில் பாஜக தரப்பு வேட்பாளராகப் பரிசீலிக்கப்படுபவர்களில் ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடித் தலைவரான திரவுபதி முர்முவின் பெயரும் உண்டு. ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராகப் பதவிவகித்த திரவுபதி முர்மு, செல்வாக்கு மிக்க பழங்குடியினத் தலைவர்.
இதற்கிடையே, காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் விலகியிருக்க விரும்பும் முதல்வர் நவீன், வேட்பாளரைப் பொறுத்து தம் ஆதரவு நிலைப்பாட்டைத் தொடர இருப்பதாக அறிவித்துள்ளார். கடந்த முறை குடியரசுத் தலைவர் வேட்பாளர்களில் பாஜக முன்னிறுத்திய ராம்நாத் கோவிந்துக்கும், துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்ட கோபால் கிருஷ்ண காந்திக்கும் நவீன் பட்நாயக் ஆதரவளித்திருந்தார். ஜூலை 18-ல் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் / துணைத் தலைவர் தேர்தலிலும் நவீன் பட்நாயக் தனது பாணியில் முடிவெடுப்பார் எனக் கருதப்படுகிறது.
“குடியரசுத் தலைவர் தேர்தலில் குறித்த நேரத்தில் உகந்த முடிவை முதல்வர் நவீன் பட்நாயக் எடுப்பார்” என பிஜு ஜனதா தளத்தின் தேசிய செய்தித் தொடர்பாளரான லெனின் மொஹன்தி கூறியிருப்பதன் பின்னணி இதுதான்.
நவீனின் முக்கியத்துவம்
இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு சுமார் 48 சதவீத வாக்குகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இவற்றுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரின் கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் பாஜக முன்னிறுத்தும் வேட்பாளரின் வெற்றி உறுதியாகும். இவற்றில் பிஜு ஜனதா கட்சிக்கு 2.85 சதவீத வாக்குகளும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு 4 சதவீத வாக்குகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மே 30-ல் டெல்லியின் சவுத் பிளாக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நவீன் பட்நாயக் சந்தித்துப் பேசியிருந்தார். 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் குடியரசு தேர்தல் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு பாஜக முயற்சி எடுத்துவருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, நிதீஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களுடன் பேசியிருக்கும் ராஜ்நாத் சிங், அந்த வரிசையில் நவீன் பட்நாயக்கிடமும் பேசியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.