மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஆறு வாரக் காலத்திற்குள் செய்து கொடுக்கிறோம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
சென்னையை சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார், சென்னையில் கட்டப்பட்டுள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் புதிதாகக் கட்டப்பட்டு வரும் நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவரின் மனுவில், ”2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி ரயில் நிலையங்கள் கட்டப்படவில்லை. மத்திய அரசின் 2016-ம் ஆண்டு சுற்றறிக்கையை மெட்ரோ நிர்வாகம் பின்பற்றவில்லை. இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டிடங்கள் கட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கானது தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மெட்ரோ நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இன்னும் ஆறு வாரக் காலத்தில் ஏற்படுத்தப்படும். மேலும் புதிதாகக் கட்டப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களை மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கட்டித் தருகிறோம்.” என உறுதியளித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆறு வாரக் காலத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.