டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீதான பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் போது, "கரோனா தொற்று காரணமாக நினைவாற்றல் இழப்பு" ஏற்பட்டதாக அவர் கூறியதாக அமலாக்க இயக்குநரகம் டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சத்யேந்திர ஜெயினின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, "ஹவாலா பரிவர்த்தனைகளில் இருந்து பணம் பெற்ற அறக்கட்டளைகளின் உறுப்பினர்கள் தொடர்பான ஆவணங்கள் தொடர்பான கேள்விகளை எதிர்கொண்டபோது, கோவிட் பாதிப்பால் தான் நினைவாற்றலை இழந்ததாக சத்யேந்திர ஜெயின் கூறினார். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை அவரது பதில்கள் எப்போதும் தவிர்க்கும் வகையில் இருந்தன" என்று அமலாக்கத்துறையின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.ராஜூ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் வாதிட்ட டெல்லி அமைச்சரின் வழக்கறிஞர், “பணமோசடி வழக்கு எதுவும் சத்யேந்திர ஜெயின் மீது பதியப்படவில்லை. அவர் தப்பியோடவோ அல்லது சாட்சியங்களை சிதைக்கவோ வாய்ப்பு இல்லை. சாட்சிகளின் வாக்குமூலத்தை ஏஜென்சி பதிவு செய்துள்ளது. மேலும் அவர் ஏழு முறை அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். சத்யேந்திர ஜெயினுக்கும் குற்றம்சாட்டப்பட்ட அறக்கட்டளைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதைத் தவிர, அவர் தூக்கத்தில் மூச்சுத்திணறலால் அவதிப்படுகிறார்" என்று கூறினார். ஆனாலும் சாட்சிகள் அச்சுறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சத்யேந்திர ஜெயின் மே 30 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவரை ஜூன் 27 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சத்யேந்திர ஜெயினுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மூலம் பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பணம் நிலம் வாங்க பயன்படுத்தப்பட்டது எனவும் அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு சத்யேந்திர ஜெயினின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சிபிஐ நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.