கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு கட்டாயத் திருமணம்!

By காமதேனு

சினிமாவுக்கு நிகரான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடப்பது உண்டு. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அத்ரங்கீ ரே’ இந்திப் படத்தில், பிஹாரின் சிவான் நகரில் மருத்துவரான தனுஷைக் கடத்திச் சென்று ரிங்குவுடன் (சாரா அலி கான்) அப்பெண்ணின் வீட்டார் கட்டாயத் திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். ஏறத்தாழ அதே பாணியில் அதே பிஹாரில் ஒரு கால்நடை மருத்துவரைக் கடத்திக் கட்டாயத் திருமணம் செய்துவைத்திருக்கிறது ஒரு கும்பல்.

பிஹாரின் பேகுசராய் பகுதியைச் சேர்ந்த அந்தக் கால்நடை மருத்துவருக்கு நேற்று மதியம் 12 மணிக்கு செல்போனில் ஓர் அழைப்பு வந்திருக்கிறது. ஒரு வளர்ப்புப் பிராணிக்கு உடல்நலக் கோளாறு எனச் சொல்லி சிலர் அவரை அழைத்திருக்கிறார்கள்.

அதை நம்பி அங்கு சென்ற கால்நடை மருத்துவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்துவைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. படித்த, ஓரளவு வசதியான இளைஞர்களைக் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி, கட்டாயத் திருமணம் செய்துவைப்பது இம்மாநிலங்களில் அதிகமாக நடப்பதாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். கட்டாயத் திருமணத்துக்குச் சம்மதிக்க மறுக்கும் இளைஞர்கள் மீது பெண் வீட்டார் தாக்குதல் நடத்துவதும் உண்டு.

2018-ல் பிஹாரின் போகாரோ எஃகு ஆலையில் இளநிலை மேலாளராகப் பணிபுரிந்துவந்த வினோத் குமார் (29) எனும் இளைஞர் கடத்தப்பட்டு பாட்னா நகரின் பண்டாரக் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்டார். தன்னை விட்டுவிடுமாறு கண்ணீருடன் அவர் கெஞ்சியதைப் பொருட்படுத்தாமல் அவருக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்ட காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. பெண் வீட்டாருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE