`முதலில் காதலில் விழ வைப்பார்: அடுத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவார்'- வாலிபர் மீது இளம் பெண் பகீர் புகார்

By ரஜினி

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுக்கு சினிமா ஆசை காட்டி, காதல் வலை விரித்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டும் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெண் பின்னணி குரல் கலைஞர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பின்னணி குரல் கலைஞராக பணிபுரியும் இளம்பெண் ஒருவர், தனது காதலன் பல பெண்களை காதலித்து ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, தனது இச்சைக்கு இணங்க வேண்டும் எனக்கூறி பல வழிகளில் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும், தற்போது மீண்டும் வேறொரு பெண்ணை வரும் 16-ம் தேதி திருமணம் செய்ய உள்ளதாகவும், அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தனக்கு திருமணமாகி 2016-ம் ஆண்டு விவாகரத்து பெற்றேன். தனது காதலன் விக்ரம் வேதகிரி சென்னை திருநின்றவூரில் வசித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு குறும்படம் ஒன்றுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் தேவைப்படுவதாக விக்ரம் அணுகினார். பின்னர் வேலை சார்ந்த விஷயங்களைப் பேசத் தொடங்கி, தனக்கு திருமணமாகி விவாகரத்து ஆனது உட்பட தன் சொந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டார். 2021-ம் ஆண்டு நேரில் சந்திக்கத் தொடங்கியதும் விக்ரம் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியபோது அவரது காதலை முதலில் மறுத்தேன். நாளடைவில் கவிதைகள், கவிதை வீடியோக்கள் அனுப்பியதால் அதனை ரசிக்கத் தொடங்கி பின்னர் காதலை ஏற்றுக்கொண்டேன்.

ஆனால் அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட விக்ரம், அவரது குடும்பத்தாருக்கு என்னை அறிமுகம் செய்துவைத்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ரகசியமாக திருமணமும் செய்து கொண்டார். அதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி தனது வீட்டில் வந்து தங்கினார். ஊரறிய விரைவில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்டார்.

காதல் மன்னன் விக்ரம்

திருமண ஆசைகாட்டி நிச்சயதார்த்தம் முடிந்த பின்னரும் எல்லோர் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்தி தன்னுடன் பாலியல் உறவில் மட்டுமே நாட்டம் காட்டி, பல வழிகளில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பாலியல் உறவுக்கு மறுத்தால் அடித்து உதைத்து சித்ரவதை செய்வார். அதைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் நான் காவல்துறையை உதவியை நாடிய போது விக்ரம் தன்னிடம் மன்னிப்பு கேட்டு நாடகமாடி, மீண்டும் சேர்ந்து கொண்டார். பின்னர் தொடர்ந்து விக்ரம் தன்னை பாலியல் உறவு செய்து வந்ததால் இதனை பொறுக்க முடியாமல் தட்டிக்கேட்டபோது விக்ரம் தன்னுடைய லேப்டாப்புடன் திடீரென தலைமறைவாகி விட்டார்.

பின்னர் தனது சகோதரர் மூலம் பேசி லேப்டாப்-ஐ திரும்பக் கேட்டபோது தங்களை மிரட்டி 20 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு லேப்டாப்-ஐ திருப்பிக் கொடுத்தார். விக்ரமின் உடைந்த செல்போன் ஒன்றை தனது வீட்டில் விட்டுச் சென்றார். அதை சரிசெய்து பார்த்தபோது, அதில் ஆபாசப் புகைப்படங்களும், அவருடன் தொடர்பில் இருந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

இவ்வாறு பெண்களுக்கு காதல் வலைவிரித்து, அவர்களுடன் நெருங்கி இருந்ததை கதையாக மாற்றி சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். தன்னுடன் நெருங்கிய பழகியதை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் வெளியிடாமல் இருக்க பத்து லட்ச ரூபாய் கேட்டு மிரட்டினார். அதுமட்டுமல்லாமல் நாளை வேறொரு பெண்ணுடன் விக்ரமுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அப்பெண்ணின் வாழ்க்கையை காவல்துறை காப்பாற்ற வேண்டும்.

விக்ரம் மீது நடவடிக்கை எடுத்து அவரால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும். ஏற்கெனவே வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். உரிய நியாயம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டோரின் பெயர் வெளியில் வந்து விடும் என்ற பயத்தின் காரணமாக பெரும்பாலான பெண்கள் புகார் அளிக்க முன்வரவில்லை" என கூறினார்.

இதனிடையே, திருநின்றவூரில் வீட்டில் இருந்த விக்ரம் வேதகிரியை இன்று காலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE