கும்பகோணம் காதல் தம்பதியர் வெட்டிக்கொலை: பதற்றத்தில் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த 5 காதல் ஜோடி!

By காமதேனு

காதல் திருமணம் செய்து கொண்ட 5 ஜோடிகள் இன்று ஒரே நாளில் சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து தங்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் சோழபுரத்தில் நேற்று நடந்த காதல் தம்பதி கொலைச் சம்பவம், தமிழகம் முழுவதும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக சேலம் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட 5 ஜோடிகள் ஓமலூர் காவல் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு கோரி இன்று தஞ்சம் அடைந்தனர்.

தேசிய மக்கள் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் ராக்கிபட்டி காலனியைச் சேர்ந்த அர்ச்சுனன். இவரது மகன் ஜனார்த்தனனும், சேலம் பனமரத்துபட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகள் உமாமகேஸ்வரியும், சேலத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு ஓமலூர் காவல் நிலையத்தில் இன்று காலை தஞ்சமடைந்தனர்.

அதேபோல ஓமலூர் அண்ணாநகரைச் சேர்ந்த சௌந்தர் மகன் மேகவாசனும், ஓமலூர் கோட்டைமாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த தங்கவேல் மகள் ரம்யாபிரபாவும் கடந்த ஓராண்டாக காதலித்து, வீட்டை விட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களும் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் பாதுகாப்பு கேட்டு இன்று காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

ஓமலூர் அருகேயுள்ள மஞ்சுளாயூர் பகுதியைச் சேர்ந்த மணியும், கருப்பூர் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த உதயதனுஷாவும், கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில் வீட்டைவிட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களைப் போலவே சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த சக்கரவர்த்தியும், அதே பகுதியைச் சேர்ந்த கிருபாவும், கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் வீட்டைவிட்டு ஓடிவந்து காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிகளும் இன்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அதேபோல ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் பூவரசனும், மல்லகவுண்டனூர் அனிதாவும் கடந்த ஓராண்டாக காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடியும் காவல் நிலையத்துக்கு வந்தது. இப்படி ஒவ்வொரு ஜோடியாக அடுத்தடுத்து ஐந்து ஜோடிகளும் பாதுகாப்பு கேட்டு, ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனால் அந்த காவல் நிலைய போலீஸார் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அதையடுத்து உரிய நடவடிக்கையில் இறங்கிய போலீஸார் ஐந்து காதல் ஜோடிகளின் குடும்பத்தினரையும் அழைத்து வந்து சமாதானம் செய்து வைத்தனர்.


காதல் ஜோடிகளுக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது, அப்படி நேர்ந்தால் பெற்றோர்கள் தான் பொறுப்பு என்று எச்சரித்து காதல் ஜோடிகளை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால், ஓமலூர் காவல் நிலையம் இன்று திருமண மண்டபம் போல பரபரப்பாகவும், கூட்டமாகவும் காட்சியளித்தது. இந்த செய்தி அறிந்து பொதுமக்களும் காவல் நிலையம் வந்து வேடிக்கைப் பார்த்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE