செல்வம் பெருகும்… அதிர்ஷ்டம் குவியும்: கீரிப்பிள்ளைகளை கூண்டில் அடைத்து வைத்த தொழிலதிபர் சிக்கினார்!

By காமதேனு

மகாராஷ்ட்டிராவின் தானே அருகே உள்ள டோம்பிவலியில் தொழிலதிபரின் வீட்டில், கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நான்கு கீரிப்பிள்ளைகளை வனத்துறையினர் மீட்டனர்.

டோம்பிவலியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கீரிப்பிள்ளைகளை வீட்டில் வைத்திருந்தால் செல்வமும், செழிப்பும் பெருகும் என்ற மூடநம்பிக்கையுடன் நான்கு கீரிப்பிள்ளைகளை கூண்டில் அடைத்து வைத்துள்ளார்.

தொழிலதிபரின் வீட்டில் இருந்து கீரிப்பிள்ளைகளை மீட்ட பின்னர் பேசிய கல்யாண் பகுதி வனத்துறை அதிகாரி எம்.டி.ஜாதவ், " தொழிலதிபர் வித்தல் ஜோஷி தனது குடும்பத்துடன் பழைய டோம்பிவலியில் சாஸ்திரி நகரில் உள்ள கணேஷ் ஸ்மிருதி பகுதியில் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டுக்காரர்களிடமிருந்து ஜோஷி தனது வீட்டில் நான்கு கீரிகளைக் கூண்டுகளில் அடைத்து வைத்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது 1972-ன் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றமாகும். எனவே, உடனடியாக ஜோஷியின் வீட்டில் சோதனை நடத்தி கூண்டில் அடைக்கப்பட்ட நான்கு கீரிகளை மீட்டு அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர் செல்வம் பெருகவும், அதிர்ஷ்டத்திற்காகவும் கீரிப்பிள்ளைகளை வளர்த்ததாக தெரிவித்தார்" எனக் கூறினார்

மேலும், "வனம் வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது, ஏனெனில் வனவிலங்குகளின் பெரிய உணவுச் சங்கிலி ஒன்றையொன்று சார்ந்துள்ளது. இதுபோன்ற வன விலங்குகளை யாரும் வீட்டிற்குள் கொண்டு வந்து செல்லப்பிராணிகளாக வளர்க்கக்கூடாது என்பது அறிவுறுத்தப்படுகிறது. புலி, சிங்கம் போன்ற விலங்குகளைப் போல மான், முயல், கீரிகள் ஆகியவையும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் ஆகும். இந்த விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் ஜாதவ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE