காவல் ஆய்வாளர் மில்லர் உட்பட 5 காவலர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் வாங்கி தருவதாக வழக்கறிஞர் ஒருவர் தங்களிடம் பேரம் பேசியதாக காவல் நிலைய விசாரணையில் மரணமடைந்ததாகக் கூறப்படும் ராஜசேகரின் பெற்றோர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ராஜசேகர் என்பவர் சந்தேகமான முறையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் மில்லர் உட்பட 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் உரிய நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க போவதில்லை என ராஜசேகரின் பெற்றோர் தெரிவித்துள்ளார்.
மேலும் உடனடியாக பிரேத பரிசோதனை முதல் மருத்துவ அறிக்கையை பெற்று தருமாறு மாநில மனித உரிமை ஆணையத்தில் ராஜசேகரின் குடும்பத்தினர் இன்று மனு ஒன்றை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் கூறுகையில், "தமிழகத்தில் தொடர்ந்து காவல் மரணங்கள் நடந்து வருகிறது. சென்னையில் விக்னேஷ் மரணத்தை தொடர்ந்து தற்போது ராஜசேகரின் காவல் மரணம் நிகழ்ந்துள்ளது.
உடற்கூராய்வு நிகழ்ந்து 24 மணி நேரத்தில் முதல் மருத்துவ அறிக்கையை சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க வேண்டுமென்ற மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை சென்னை காவல்துறை பொருட்படுத்தாமல் அறிக்கையை தர மறுக்கிறது" என்று கூறினார்.
மேலும் "ராஜசேகர் மரண வழக்கில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முதற்கட்டமாக 8 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை அரசு ராஜசேகரின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். ராஜசேகர் மரண வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. எனவே உடனடியாக மாஜிஸ்திரேட்டிடம் இருந்து முதல் மருத்துவ அறிக்கையை மாநில மனித உரிமைகள் ஆணையம் பெற்று தரவேண்டும் என ராஜசேகரின் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
"இறந்துபோன ராஜசேகரின் உடலில் லத்தியால் தாக்கிய காயம் மற்றும் விரல் உடைக்கப்பட்டுள்ளதாக நேரில் பார்த்த அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் மில்லர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ராஜசேகர் மரண வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மில்லர் உட்பட 5 காவலர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் வாங்கி தருவதாக வழக்கறிஞர் ஒருவர் தங்களிடம் பேரம் பேசியதாகவும், உடனடியாக எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் மில்லர் உட்பட 5 காவல்துறையினரை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கும் வரை ராஜசேகர் உடலை வாங்கப் போவதில்லை" என்றார் ஆசிர்வாதம் .