தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டில் 40 பவுன், 10 கிலோ வெள்ளி, 2 லட்சம் கொள்ளை: வெளியூர் சென்ற நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை!

By காமதேனு

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் பேருந்து உரிமையாளரது வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைரம் வெள்ளி மற்றும் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோப்ப நாய்

விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ரோஜாப்பூ தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(65). தனியார் பேருந்து உரிமையாளர். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுள்ளார்.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, படுக்கை அறை மற்றும் பூஜை அறைகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. விருத்தாசலம் போலீஸார், திருட்டு சம்பவங்களில் உள்ள தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும், கடலூரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE