ஏப்ரல் மாதத்தில் 15.08 சதவீதமாக இருந்த இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம், கடந்த மே மாதத்தில் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமான பணவீக்க அளவாகும்.
எரிபொருள், உலோகங்கள், ரசாயனங்கள் மற்றும் உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட உயர்வு காரணமாக, இந்தியாவின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் மே மாதத்தில் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை விலைக் குறியீடு (WPI) அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ந்து 14 மாதங்களாக இரட்டை இலக்கத்தில் உள்ளது.
மொத்த விலை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 15.08 சதவீதமாகவும், அதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் 14.55 சதவீதமாகவும் இருந்தது.
தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மே 2021-ல் இந்தியாவின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 13.11 சதவீதமாக இருந்தது.
கனிம எண்ணெய்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், உணவு அல்லாத பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள் போன்றவற்றின் விலை கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதால் மொத்த விலை பணவீக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக இருந்த இந்தியாவின் சில்லறை விலை பணவீக்கம், மே மாதம் 7.04 சதவீதமாக குறைந்தது. ஆனால் கடந்த 2021 மே மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 6.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.