புகைப்பழக்கத்தைவிட ஆபத்தான காற்று மாசுபாடு: இந்தியா எதிர்கொண்டிருக்கும் ஆபத்து!

By காமதேனு

சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்திக் கொள்கை நிறுவனம் (எபிக்) வெளியிட்டிருக்கும் காற்று தரக் குறியீட்டெண் பட்டியலில், உலகிலேயே காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நகரங்களில் டெல்லி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் வசிப்பவர்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் குறைவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல், லக்னோவில் வசிப்பவர்களின் ஆயுட்காலம் 9.5 ஆண்டுகள் குறைவதாகவும் அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தோ - கங்கைச் சமவெளிதான் உலகிலேயே அதிக அளவில் மாசடைந்த பகுதி. இதே நிலை நீடித்தால் பஞ்சாப் முதல் மேற்கு வங்கம் வரை வசிக்கும் 50 கோடிக்கும் மேற்பட்டோரின் சராசரி ஆயுட்காலத்தில் 7.6 ஆண்டுகள் குறையும் என அஞ்சப்படுகிறது.

அந்த வகையில், புகைப்பழக்கத்தைவிடவும் காற்று மாசுபாடுதான் மனிதர்களின் ஆயுட்காலத்தை வெகுவாகக் குறைக்கிறது எனத் தெரியவந்திருக்கிறது. புகைப்பழக்கத்தின் காரணமாக சராசரி ஆயுட்காலம் 1.5 ஆண்டுகள் குறைகிறது. தாய் மற்றும் சேயிடம் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக சராசரி ஆயுட்காலம் 1.8 ஆண்டுகள் குறைகிறது.

உலகிலேயே அதிகமாக மாசடைந்த நாடுகளில் வங்கதேசம் முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

பிரச்சினைக்குரிய ‘பிஎம் 10’

காற்றில் மிதக்கும் துகள்களைப் பொறுத்து காற்றின் தரம் அளவிடப்படுகிறது. 2.5 முதல் 10 மைக்ரோமீட்டர் விட்டம் கொண்ட துகள்கள் ‘பிஎம் 10’ என்று அழைக்கப்படுகின்றன. காற்றில் கலந்திருக்கும் இத்துகள்களும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவையே. 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான அளவு கொண்ட துகள்கள் பிஎம் 2.5 என்று அழைக்கப்படுகின்றன. இவைதான் மிகவும் ஆபத்து விளைவிக்கக் கூடியவை. நுரையீரல் உள்ளிட்ட உடல் பாகங்களில் தங்கி உடலுக்குத் தீங்கு இழைக்கக்கூடியவை. சுவாசம் மூலம் உள்ளிழுக்கப்படும் வகையில் அளவில் நுண்ணிய அளவிலானவை.

ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் என்பது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் சராசரி அளவாகும். அதிகபட்சமாக, கன மீட்டருக்கு 40 மைக்ரோகிராம் வரை இருக்கலாம் என்று சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. டெல்லியைப் பொறுத்தவரை பிஎம் 10 அளவீடு, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்ததைவிடவும் 10 மடங்கு அதிகம். இது கருவில் இருக்கும் காலத்திலிருந்தே மனிதர்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என இந்த அறிக்கையைத் தயாரித்த நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

கரோனா பொதுமுடக்கம் முழுமையாக அமலில் இருந்த 2020-ம் ஆண்டிலும் இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியர்களின் சராசரி ஆயுட் காலம் 5 ஆண்டுகள் குறைந்திருக்கிறது. உலக அளவில் இதே காலகட்டத்தில் 2.2 ஆண்டுகள் சராசரி ஆயுட்காலம் குறைந்திருந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களாகவே இந்தப் பிரச்சினையை இந்தியா அதிக அளவில் எதிர்கொண்டுவருகிறது.

காரணம் என்ன?

இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் வாகனப் போக்குவரத்தும், நிலக்கரி பயன்பாடு கொண்ட அனல் மின்சார உற்பத்தி நிலையங்களும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் அதிகரித்திருக்கிறது. பயிர்களை எரித்தல், செங்கல் சூளைகள் மற்றும் பிற தொழில் துறைச் செயல்பாடுகள் மூலம் உள்ளிட்டவை இதன் முக்கியக் காரணிகள்.

1998 முதல் இந்தியாவில் காற்றின் தரம் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துவருகிறது. இந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் காற்று மாசுபாடு 61.4 சதவீதம் அதிகரித்திருப்பதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

2013 முதல் உலக அளவில் காற்று மாசுபாடு அதிகரித்ததில் இந்தியாவின் பங்கு மட்டும் 44 சதவீதம் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE