தொடர்ந்து அதிகரித்து வரும் விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் உள்நாட்டு விமானக் கட்டணம் 20% அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு பின்னர் வேகமெடுக்கத் தொடங்கிய விமானப்போக்குவரத்து தற்போது மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.
விமானப் போக்குவரத்தினை பொறுத்தவரை, விமான நிறுவனங்களின் இயக்கச் செலவில் 40% வரை பெரும்பகுதி விமான எரிபொருள் எனப்படும் ஏவியேஷன் டர்பைன் ஃப்யூயலுக்காகவே (ATF) செலவாகிறது, எனவே, அதுவே விமானப் பயணச்சீட்டு கட்டணத்தையும் தீர்மானிக்கிறது.
இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விமான எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கடந்த மாதம் விமான எரிபொருளின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதனால் விமான நிறுவனங்கள் விமானக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று தொழில்துறையினர் கூறுகின்றனர். வரும் ஜூன் 15 அன்று மீண்டும் விமான எரிபொருள் விலை உயரவுள்ளது. இதன் காரணமாக விமானக்கட்டணம் மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அதிக எரிபொருள் செலவு, கட்டண உயர்வால் குறைந்த விமானப் போக்குவரத்து மற்றும் எதிர்பார்த்ததை விட அதிகமான அந்நியச் செலாவணி இழப்புகள் காரணமாக வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
மே மாத காலம் வரை கரோனா நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு மீண்டு வந்த விமானப் பயணத்திற்கான தேவை, தற்போது மீண்டும் ஜூன் மாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. பயணச்சீட்டு கட்டண விலை உயர்வு காரணமாக முன்பதிவும் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தினசரி உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 4 லட்சத்தைத் தாண்டியது, ஆனால் மே மற்றும் ஜூன் மாதங்களில் இது 3,20,000 மற்றும் 3,50,000 என குறைந்துள்ளது. கரோனாவுக்கு முந்தைய 2019 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தினசரி உள்நாட்டு விமானப் போக்குவரத்து 4,20,000 என்ற அளவைத் தொட்டது.