தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட குஜராத் பெண் தேனிலவிற்கு தேர்ந்தெடுத்த இடம் எது தெரியுமா?

By காமதேனு

இந்தியாவின் முதல் 'சோலோகாமி' எனப்படும் சுயதிருமணமாக, குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து எனும் பெண் புதன்கிழமையன்று தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டுள்ளார்.

குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த 24 வயது பெண் ஷாமா பிந்து, ஜூன் 11-ம் தேதி தன்னைத்தானே ஒரு கோயிலில் சுயதிருமணம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த வாரம் அறிவித்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மாதிரியான திருமணங்கள் இந்து மதத்துக்கு எதிரானது, எனவே, அந்த பெண்ணை எந்தக் கோயிலிலும் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக மகளிரணி தலைவி எச்சரித்திருந்தார்.

இதனால் எந்தவொரு சர்ச்சையும் ஏற்படாத வகையில் ஜூன் 11-ம் தேதிக்கு முன்பே தனது திருமணத்தை நடத்த ஷாமா முடிவு செய்தார். இது தொடர்பாக பேசிய அவர், " தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக கடந்த புதன் கிழமை மாலை எனது வீட்டில் சில குறிப்பிட்ட நண்பர்கள் முன்னிலையில் என்னை நானே 'சோலோகாமி; திருமணம் செய்து கொண்டேன். எனது திருமணம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து புரோகிதர்கூட திருமணத்தை நடத்திவைக்க வரவில்லை" என்று அவர் கூறினார்.

திருமணம் தொடர்பான படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷாமா பிந்து, திருமண நிகழ்வில் ஹல்டி மற்றும் மெஹந்தி உள்ளிட்ட பல்வேறு விழாக்களின் படங்களையும், திருமண வீடியோவையும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இருக்கும் படங்களையும் பகிர்ந்துள்ளார்.

தனது திருமண அனுபவம் குறித்து பேசிய ஷாமா, "இது ஒரு கனவு நனவாகும் தருணம். இந்த திருமணத்தில் மாப்பிள்ளை மற்றும் புரோகிதர் தவிர மற்ற அனைத்தும் இருந்தது, நான் சம்பிரதாய வழக்கத்தின்படி விநாயகப் பெருமானுக்கும்,லட்சுமி தேவிக்கும் பூஜை செய்து, மாலை அணிவித்து, என் தலையில் சிந்தூர் பூசி, ஏழு சபதம் கூட எடுத்தேன்" என்றார்

ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் க்ஷமா பிந்து, முன்னதாக " நான் என் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளேன். அதனால்தான் இந்த திருமணம், எனது முடிவுக்கு பெற்றோர் ஆதரவாக இருந்தனர்" என்று கூறினார். திருமணம் முடிந்ததால் இப்போது கோவாவுக்கு இரண்டு வார தேனிலவுக்குச் செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE