‘இனி எந்த அரசு பதவியையும் வகிக்கப்போவதில்லை’: எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ச!

By காமதேனு

"இனி வரும் நாட்களில் எந்த அரசு பதவியையும் தான் நிர்வகிக்கப் போவதில்லை" என நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த இலங்கை முன்னாள் நிதியமைச்சரான பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

நமது அண்டை நாளான இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளது. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்கேவை, அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரதமராக நியமித்தார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கையில் போராட்டம் நீடித்து வரும் நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது எம்.பி பதவியை இன்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை இலங்கை நாடாளுமன்ற செயலாளரிடம் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், " இனி வரும் நாட்களில் எந்த அரசு பதவியையும் தான் நிர்வகிக்கப் போவதில்லை" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE