குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிப்பு: பாஜக- எதிர்கட்சிகள் இடையே கடும் போட்டி?

By காமதேனு

இந்திய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பினை இன்று வெளியிட்ட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் ஜூன் 15-ம் தேதி தொடங்கி ஜூன் 29-ம் தேதி முடிவடையும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை மீதான பரிசீலனை ஜூன் 30-ம் தேதி நடைபெறும் எனவும், வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜூலை 2 கடைசி நாள் எனவும் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ம் தேதியும் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. எனவே புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ளன.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யாரை வேட்பாளராக நிறுத்தும் என எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியலும் நிலவுகிறது. பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தரப்போது யாரை வேட்பாளராக நிறுத்துவார்கள் என இதுவரை தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளை ஒன்று திரட்டி பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் களமிறங்கியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE