ராகுலின் கருத்துகள் நீக்கம் முதல் எம்.பி.க்களுக்கு பிரதமர் அறிவுரை வரை: டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

> ராகுலின் கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திங்கட்கிழமை அன்று அவையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசினார். இதனால் ஆளும் பாஜக மற்றும் ராகுல் காந்தி இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இந்தச் சூழலில் அவர் தெரிவித்த கருத்துகள் சில அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

சிறுபான்மையின மக்களுக்கு பாஜக அநீதி செய்கிறது, தொழிலதிபர்கள் அதானி மற்றும் அம்பானி குறித்த விமர்சனம், நீட் தேர்வு பணம் படைத்த மாணவர்களுக்கானதே தவிர சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கானது அல்ல, அக்னி பாதை திட்டம் பிரதமர் அலுவலகத்தின் திட்டம் போன்ற ராகுலின் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

> மோடியின் உலகில் உண்மையை அழிக்க முடியும் - ராகுல் காந்தி: மக்களவையில் திங்கள்கிழமை தனது உரை குறித்து கருத்து ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தார். நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், "மோடியின் உலகத்தில் உண்மைகளை அழிக்க முடியும். ஆனால் நிஜத்தில் உண்மை அகற்ற முடியாது. நான் சொல்ல வேண்டியதைச் சொன்னேன். அதுதான் உண்மை. அவர்கள் எவ்வளவு வேண்டுமானலும் அழித்துக்கொள்ளட்டும். உண்மை எப்போதும் உண்மையே!" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

> “ராகுல் பாஜகவை விமர்சித்தார்; இந்துக்களை அல்ல”: "ராகுல், இந்துக்களை அவமதிக்கவில்லை. அவர் தனது உரையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். பாஜக குறித்தும், பாஜக தலைவர்கள் குறித்தும் தான் அவர் பேசி இருந்தார்" என்று ராகுல் காந்தியின் மக்களவைப் பேச்சுக்கு அவரது சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

> என்டிஏ எம்.பி.க்கள் பின்பற்ற பிரதமர் மோடி அறிவுரை: நாடாளுமன்ற விதிகள், நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பின்பற்றுமாறும், ஒரு நல்ல எம்.பி.,யாக உருவாக இவை முக்கியம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, ஹெச்.டி. குமாரசாமி, சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

> அசாம் வெள்ளத்தால் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு: பிரம்மபுத்திரா அதன் கிளை ஆறுகள் என 8 ஆறுகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் அசாம் மாநிலத்தின் 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தவித்துவருவதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் வெள்ள நிலவரம் மிகவும் மோசமடைந்து இருப்பதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வேதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் மத்திய அரசு உதவியுடன் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

> ‘69%இடஒதுக்கீட்டை பாதுகாக்கவாவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக’:

69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

> இந்துக்கள் குறித்த பேச்சு ராகுலின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது: "நாடாளுமன்றத்தில் நேற்று இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று சொல்லி ஒட்டுமொத்த இந்துக்களையும் மோசமாக ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார் அவருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்துக்கென ஒரு விதிமுறை இருக்கிறது, நடைமுறை இருக்கிறது. அது மீறி ராகுல் காந்தி படத்தைக் காட்டி படம் காண்பித்து கொண்டிருந்தார். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் முதல் பேச்சிலேயே இப்படித்தான் பேச வேண்டும் என முடிவு செய்து தனக்கு விளம்பரம் தேடிக் கொள்ளும் நோக்கத்திலேயே எதிர்மறையாக பேசியுள்ளார். இது அவரது பயிற்சியின்மை, முதிர்ச்சியின்மையை காட்டுகிறது." என்று தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

> ராகுலுக்கு எதிராக புதுச்சேரி பாஜக எம்எல்ஏ போராட்டம்: நாடாளுமன்ற கூட்டத்தில் இந்துக்களை வன்முறையாளர்கள் என கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

> ரோகித் சர்மாவைப் புகழ்ந்த ஷாகித் அஃப்ரிடி: அண்மையில் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த சூழலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி, இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை புகழ்ந்துள்ளார்.

“அணியில் கேப்டனின் பங்கு முக்கியமானது. கேப்டனின் உடல் மொழி அணியின் உடல் மொழியாக மாறுகிறது. கேப்டன் என்பவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இதற்கு உதாரணமாக ரோகித் சர்மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அவரது ஆட்டம், விளையாடும் பாணியையும் பார்க்க வேண்டும்.” என ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

> பாகிஸ்தானில் கிறிஸ்தவருக்கு மரண தண்டனை: பாகிஸ்தான் நாட்டில் வெறுப்பை பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நருக்கு மரண தண்டனை விதித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE